Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அக்கனி பூக்கள்

அக்கனி பூக்கள்

அக்கனி பூக்கள்

அக்கனி பூக்கள்

ADDED : நவ 25, 2016 09:34 AM


Google News
Latest Tamil News
பாஞ்சால தேசத்தை ஆண்ட சிம்மகேது என்ற அரசன் வேட்டைக்குச் சென்றான். அவனுடன் வந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக சென்று விட்டனர். ஒரே ஒரு வீரனும், மன்னனும் மட்டும் அங்கிருந்த பாழடைந்த சிவாலயத்தை அடைந்தார்கள்.

அந்தக் கோவிலில் லிங்கம் ஒன்று இருந்தது. அதைக் கண்ட வீரன், 'யாரும் வராத இந்தக் காட்டுக்குள் லிங்கம் தனித்து இருக்கிறதே! இதை வீட்டுக்கு எடுத்துச்சென்று தினமும் பூஜை செய்யலாம்' என நினைத்தான்.

மன்னனிடம், “மன்னா! இந்த சிவலிங்கத்தை என் வீட்டுக்கு எடுத்துச் சென்று தினமும் வழிபாடு செய்ய நினைக்கிறேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டான்.

மன்னனும் சம்மதித்தான்.

வீரனும் வீட்டுக்கு லிங்கத்தை எடுத்துச் சென்றான். ஆனால் முறையான வழிபாடு எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.

மன்னனிடம் வந்து, “லிங்கத்தை முறையாக வழிபடுவது எப்படி எனத் தெரியவில்லையே,” என வருந்தினான்.

அவனிடம் சிம்மகேது, “சிவ வழிபாடு மிக சுலபமானது. நீ தினமும் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு, அருகிலுள்ள சுடுகாட்டில் இருந்து சாம்பல் அள்ளி வர வேண்டும். அதைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த சாம்பல் சிவனுக்கு மிக பிடித்தமானது. நீ உனக்காக தயாரிக்கும் உணவை அவருக்கு நைவேத்யம் செய்து விட்டுச் சாப்பிட வேண்டும். அவ்வளவு தான்!” என்றான்.

அரசன் சொன்னபடியே வீரனும் தினமும் சுடுகாட்டுக்குப் போய், சாம்பல் எடுத்து வந்து பூஜித்தான். ஒருநாள் கடும் மழை. சுடுகாட்டில் கிடந்த சாம்பல் கரைந்து போய் விட்டது, “இன்று சிவபூஜையை எப்படி செய்யப் போகிறேன்?” என தன் மனைவியிடம் புலம்பினான்.

அவள் அவனிடம், “ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஏன் இப்படி கலங்குகிறீர்கள்? குளித்துத் தயாராகுங்கள். அதற்குள் சாம்பல் தயாராகி விடும். அதற்கு நான் பொறுப்பு!” என்றாள்.

'அது எப்படி சாத்தியம்?' என்ற கணவனிடம், ''அன்பரே! எந்தக் காரணம் கொண்டும் சிவபூஜை நிற்கக்கூடாது. நான் என் மீது நெருப்பு வைத்து உயிரை விடுகிறேன். என் சாம்பலை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அபிஷேகம் செய்யுங்கள். இது தீர்வதற்குள் மழையும் நின்று விடும். உங்களுக்கு வேறு சாம்பல் கிடைக்கும்,” என்றவள் தன் உடல் மீது தீ வைக்கப் போனாள். வீரன் அவளைத் தடுக்க முயற்சிப்பதற்குள் தீயை தன் மீது வைத்தாள். ஆனால், அந்த நெருப்பு பூவாக மாறி விட்டது. பூஜைக்காக உயிரையும் தரத் துணிந்த அவளுக்கு, அம்பிகையுடன் சிவன் காட்சி தந்தார்.

“பெண்ணே! பக்தியாலும், கணவன் மீதுள்ள அன்பாலும் தீக்கு இரையாகத் துணிந்தாயே! சிவபூஜை செய்வதையே கடமையாகக் கொண்ட உனக்கும் உன்

கணவனுக்கும் எம் பூரண ஆசிகள்! அள்ள அள்ளக் குறையாத சுடுகாட்டு சாம்பல் கலசத்தை தருகிறேன். நீங்கள் இன்னும் பலகாலம் நித்யபூஜை செய்து வளமோடு வாழ்ந்து சிவலோகம் அடைவீர்களாக!” என்று அருள்புரிந்தார்.

ஆச்சரியத்தில் அவளுக்கு வார்த்தை ஏதும் வரவில்லை. வழக்கம் போல், வீரனும், அவன் மனைவியும் சிவபூஜையை தொடர்ந்து செய்து பிறவாநிலையை அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us