Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வ தரிசனம் (15)

தெய்வ தரிசனம் (15)

தெய்வ தரிசனம் (15)

தெய்வ தரிசனம் (15)

ADDED : ஜன 27, 2017 12:00 PM


Google News
Latest Tamil News
நம் உள்ளார்ந்த பக்தியை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி, பரவசப்படுவதற்கு மட்டுமல்ல ஆலயங்கள்...! தன்னைத் தேடி வரும் உண்மையான பக்தன், சுயநலமின்றி வேண்டிடும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அருள்புரிவதற்காகவும் அவை அமைந்துள்ளன. இந்த வகையில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில், 18வது தலமாகப் போற்றி வணங்கப்படுவது திருக்கருகாவூர்.

சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்றது.

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஊர்.

'திரு' என்பது இத்தலத்தை உயர்வுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. கருகாவூர் என்பது கரு + கா+ ஊர் என்று பிரித்துப் பொருள் கொண்டால், இத்தலத்தின் சிறப்பை எளிதில் புரிந்து கொள்ளலாம். கருகாவூர் என்பதற்கு 'வயிற்றில் உள்ள கருவைக் காத்து ரட்சிக்கின்ற ஊர்' என்பது பொருள்.

திருமணமான ஒரு பெண் முழுமை பெறுவதற்கு அவள் தாய்மைப் பேற்றை அடைய வேண்டும். ஆனால், மணமான எல்லா பெண்களுக்கும் இப்பேறு

அமைவதில்லை. அத்தகைய பெண்கள் திருக்கருகாவூரில் குடிகொண்டுள்ள அன்னை கர்ப்பரட்சாம்பிகையை முறைப்படி வழிபட்டால் தாய்மைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

குழந்தை இல்லாதவர்கள் அந்த பாக்கியம் பெறவும், கன்னியர்களுக்குத் திருமணம் கூடி வரவும், கரு காத்த நாயகியை வேண்டி தூய நெய்யால் சன்னிதிப் படியை மெழுகி, கோலமிட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

அம்மன் திருப்பாதத்தில் வைத்து மந்திரிக்கப்பட்ட நெய்யை 48 நாள் தொடர்ந்து தம்பதிகள் இரவில் சிறிதளவு உட்கொண்டு வந்தால், குழந்தைப் பேறு அமையும் என்பது நிதர்சனமான உண்மை.

பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையுடன் வந்து தொட்டில் கட்டி, துலாபாரம் செய்து நன்றியுடன் வழிபட வேண்டும். கருவுற்ற பெண்கள் கருகாத்த நாயகியை வணங்கி, அம்மன் பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து வாங்கிச் செல்கின்றனர். கர்ப்பிணிகள் ஐந்து அல்லது ஏழு மாதத்தில் இருந்தே வயிற்றில் இந்த விளக்கெண்ணெய்யைத் தடவி வர நலம் உண்டாகும்.

கருகாத்த நாயகி என்கிற சிறப்பு இந்த அம்மனுக்கு உண்டாக காரணமான தல வரலாற்றைத் தெரிந்து கொள்வோமா?

வடமொழியில் ஸ்கந்த புராணத்திலுள்ள க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனத்குமார சங்கிதையில் நாரதருக்கு சனத்குமாரர் கூறுவதாக இந்தத் தல வரலாறு அமைந்துள்ளது.

முல்லை வனமான இத்தலத்தில் கவுதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தனர். நித்ருவ முனிவரும், அவரது மனைவி வேதிகையும் இங்கு தங்கி முனிவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தனர். தங்களுக்குக் குழந்தை இல்லாத ஏக்கத்தால், ஒரு நாள்

முனிவர்களிடம் கவலை தோய்ந்த குரலில் இவர்கள் சொன்னார்கள். அதற்கு, 'இங்கு எழுந்தருளி உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் வேண்டியது கிடைக்கும்' என்று அருளினர் முனிவர்கள்.

அதன்படி முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள அவர்களை வணங்கினர் தம்பதியர். தங்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்க வேண்டும் என்று உருக்கமாகப்

பிரார்த்தித்துக் கொண்டனர். தெய்வங்களின் பரிபூரண ஆசி தம்பதியருக்குக் கிடைத்தது. அந்த ஆசியின்படி கர்ப்பவதியானாள் வேதிகை.

அப்போது கடும் வெயில் காலம். வேதிகையின் கணவரான நித்ருவ முனிவர் ேக்ஷத்ராடனம் போயிருந்தார். அன்றைய தினம் அவளுக்கு பேறு கால அவஸ்தை ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து ஊர்த்துவர் என்ற முனிவர் பிட்சை கேட்டு வாசலில் நின்றார். முனிவரின் குரல் கேட்டும், வேதிகையால்

எழக்கூட முடியவில்லை. குரல் கொடுக்கவும் இயலாத அளவுக்கு வலி தாங்க முடியவில்லை.

வேதிகையின் அவஸ்தை பற்றி அறியாத ஊர்த்துவர், அவள் தன்னை அவமதிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவளுக்கு, எந்த நல்லதும் நடக்கக்கூடாது சாபம் கொடுத்து விட்டார். அவ்வளவுதான்... வேதிகையின் கரு அடுத்த கணமே கலைந்து போனது. அன்னை கர்ப்பரட்சாம்பிகையால் கிடைத்த குழந்தை பாக்கியம், இப்படி ஆகி விட்டதே என அந்த அன்னையிடமே போய் நின்றாள் வேதிகை.

''அம்மா! இது எந்த வகையில் நியாயம்'' எனக் கேட்கவும், அம்பாள் அவள் முன் தோன்றினாள். கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் ஆவாஹனம் செய்து, ''வேதிகை! கவலை வேண்டாம். கலைந்த உன் கரு இந்த குடத்தில் பத்திரமாக இருக்கிறது. உனக்கு இதிலிருந்தே குழந்தை கிடைக்கும்,'' என்றாள்.

அதன்படி குடத்தை தன்வசமே வைத்திருந்து குழந்தை பிறக்கும் வரை காப்பாற்றிக் கொடுத்தாள். அந்தக் குழந்தை தான் நருவன்.

அம்பாளின் அருள் மகிமை, அனுபவத்தால் உணர்ந்த வேதிகை, ''அன்னையே! இனி இந்தத் தலத்தில், நீ 'கர்ப்பரட்சாம்பிகை' என்ற பெயரில் எழுந்தருளி,

கருத்தரித்தவர்களையும், அவர்களது கருவையும் என்றென்றும் உடன் இருந்து காப்பாற்ற வேண்டும். கர்ப்பவதிகள் சுகப் பிரசவம் காண வேண்டும்,'' என்று

பிரார்த்தித்தாள். அம்பாளும் அவ்வாறே அருள்பாலித்தாள். குழந்தை நருவனுக்குத் தாய்ப்பால் இல்லாததால், அம்பாளே காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும், ஒரு பால் குளம் தோன்றியது. அது ஆலயத்துக்கு முன்புறம் இன்றும் காணப்படுகிறது. இதை 'க்ஷீரகுண்டம்' என்பர். 'க்ஷீரம்' என்றால் பால்.

மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் திருக்கருகாவூர் வந்து, கர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டு நலம் பெறுகின்றனர்.

இங்குள்ள சிவனின் திருநாமம் முல்லைவன நாதர். மகப்பேறு அளிப்பதால் கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அழைப்பர்.

கர்ப்பரட்சாம்பிகை மிகவும் அழகாகக் காட்சி தருகிறாள். கர்ப்ப ரட்சகி, கருகாத்த நாயகி, கரும்பனையாள் என்றெல்லாம் இவளுக்கு பெயர்கள் உண்டு. ஐந்தரை அடி உயரத்தில் இடதுகையை இடுப்பில் வைத்தபடி, அதாவது கர்ப்பத்தைத் தாங்கியபடி அருள்கின்ற திருக்காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது.

இன்னும் தரிசிப்போம்...

பி. சுவாமிநாதன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us