Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பொறுமைக்கு கிடைத்த பெருமை

பொறுமைக்கு கிடைத்த பெருமை

பொறுமைக்கு கிடைத்த பெருமை

பொறுமைக்கு கிடைத்த பெருமை

ADDED : மார் 10, 2017 12:44 PM


Google News
Latest Tamil News
அரசனுக்கு பிள்ளையில்லை என்றால், யானையை வீதிவலம் வரச் செய்து, யாரைத் தொடுகிறதோ அவரையே அரசராக முடிசூட்டுவது வழக்கம்.

யானை கவுசிகர் என்ற சந்நியாசியைத் தொட்டது. அவர் சபைக்கு அழைத்து வரப்பட்டார். “என்னை ஏன் இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்?” என்று மந்திரிகளிடம் கேட்டார்.

“சுவாமிஜி! இப்பொழுது தாங்கள் தான் இந்நாட்டு மன்னர். பட்டத்து யானை உங்களையே அரசராகத் தேர்ந்தெடுத்துள்ளது” என்று முதல் மந்திரி கூறினார்.

“சந்நியாசியான எனக்கு அரசபதவி எதற்கு?” என்று கேட்டார். மந்திரிகள் அவரிடம் கெஞ்சினர். கவுசிகரும் வேறு வழியின்றி பதவியேற்றார்.

ஆனால் நாட்டில் நடைபெறும் விஷயங்களில் சிரத்தையின்றி இருந்தார். பக்கத்து நாட்டு மன்னன் வீரசிம்மன், படையெடுத்தான். மந்திரிகள் இந்தத் தகவலை கவுசிகரிடம் சொன்னார்கள்.

“ஏன் நம் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறான்? நாம் அவனுக்கு என்ன தீங்கிழைத்தோம்? என்றார் கவுசிகர்.

“எங்களுக்குத் தெரியாது, எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் எதிர்த்துப் போரிட உத்தரவு கொடுங்கள்,” என்று முதல்மந்திரி வேண்டினார்.

“வேண்டாம். அமைதியாக இருங்கள். நாம் ஏன் சண்டை போட வேண்டும்! என்றார் கவுசிகர்.

மந்திரிகள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். இந்நிலையில், வீரசிம்மன், கவுசிகரின் சபைக்கு வந்தான்.

“அரசே! தங்களுடன் சண்டை செய்ய வந்திருக்கிறேன். நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டான்.

“மன்னா! இதனால் நீ என்ன நன்மையை அடையப் போகிறாய்?” எதற்காக எங்களுடன் போரிட எண்ணுகிறாய்? ” என்றார் கவுசிகர்.

“போரிட்டு ஜெயித்தால் உங்கள் தேசம் எனக்குரியதாகி விடுமே!” என்று வீரசிம்மன் கூறினான்.

“வீரசிம்மா! கேவலம்! இந்த தேசத்தைப் பிடிப்பதற்காகவா போரிட நீ எண்ணுகிறாய்? இதோ! இந்த தேசத்தின் அரசாட்சியை இப்போதே நீ ஏற்றுக் கொள். நானோ துறவி. இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். உடனடியாக இந்த சிம்மாசனத்தில் ஏறி உட்கார்! இன்றிலிருந்து இந்த தேசத்தின் மன்னன் நீயே ஆவாய்,” என்றார்.

இதுகேட்டு, கவுசிகரின் பாதங்களில் விழுந்த வீரசிம்மன், தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டினான். மேலும் தனது நாட்டையும் கவுசிகரிடமே ஒப்படைத்து விட்டான்.

மந்திரிகள் பிரமித்துப் போயினர்.

ரத்தக்களரியிலிருந்து ஒரு நாடு முழுமையாகக் காப்பாற்றப்பட்டதுடன், கேட்காமலேயே மற்றொரு நாடும் கவுசிகருக்குக் கிட்டியதைப் பாராட்டினர்.

பொறுமைக்கு கிடைத்த பெருமையை பார்த்தீர்களா!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us