Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வப் பிறவிகள்! (3)

தெய்வப் பிறவிகள்! (3)

தெய்வப் பிறவிகள்! (3)

தெய்வப் பிறவிகள்! (3)

ADDED : ஏப் 10, 2017 03:16 PM


Google News
Latest Tamil News
''அந்த ராமனின் சேவகன் நான், அவன் அரசாங்கத்தின் ஊழியன் நான், வேறு எந்த மனிதனின் ஏவலுக்காக எப்படி, எதற்குப் பணிவேன் நான்!'' என்று முழங்கியவர் துளசிதாசர்.

வேத முதல்வன், ராமன் என்னும் பெயர் தாங்கி வைதேகி நாயகனாக இறங்கி வந்தான். அவனை வையகத்தின் தலைசிறந்த மானிடனாக ஆதி காவியத்தில் வடித்தார் வால்மீகி. செந்தமிழ்க் கவிதையில் தெய்வமாய்த் தேக்கி மகிழ்ந்தான் கம்பன். அந்த ஸ்ரீராமனை, வடமொழி, தமிழ் போன்ற செம்மொழிகளல்லாத 'அவதி' என்னும் மொழியில் 'ராம்சரித மானஸ்' என்ற பெயரில் ராமாயணத்தை வழங்கி வானளாவிய புகழ்கொண்டார் தாசர்.

வால்மீகியின் மறுபிறவி என்று கருதப்படும் துளசிதாசர் 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர். மஹாயோகி த்ரைலிங்க சுவாமிகளின் காலத்தில் காசியில் வாழ்ந்தவர். ஆத்மாராம் துபே - ஹூல்சி தம்பதியர் தவமிருந்து பெற்ற பிள்ளை. இளமைப் பருவம் வரை அவருடைய வாழ்க்கை துன்பமயமாக இருந்தது. தாயின் கர்ப்பத்தில் 12 மாதங்கள் தங்கியிருந்து, பிறக்கும்போதே 32 பற்களுடன், ஐந்து வயதுக் குழந்தைபோல் பிறந்தார். அசைவும் பேச்சும் இல்லாத குழந்தை, ராமநாமம் சொல்லும்போது மட்டும் அசைந்ததால், 'ராம் போலா' என்று பெயரிட்டனர்.

''பெற்றோர் உயிருக்கு இந்தப் பிள்ளையால் ஆபத்து. 12 ஆண்டுகள் தள்ளி இருந்தால் ஒருவேளை அவர்கள் பிழைக்கலாம்,'' என்றார் ஜோதிடர். தாய் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். அதிர்ச்சியுற்ற தந்தை, நிறைய பணம், பொருட்களை சுனியா என்னும் நம்பத்தகுந்த பணிப்பெண்ணிடம் கொடுத்து, தொலைவில் உள்ள ஹரிபூர் என்னும் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.

சுனியா, ராம் போலாவைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். எதையும் ஒருமுறை கேட்டால் அப்படியே திரும்பச் சொல்லவும், பாடவும் வல்லமை உள்ளவனாக வளர்ந்தது குழந்தை. பதுங்கி இருந்த விதி மறுபடியும் பாய்ந்தது. சுனியா, காய்ச்சல் கண்டு இறந்து விட்டாள். ஊர்க்காரர்கள் வீட்டையும்,

பொருள்களையும் கவர்ந்து கொண்டு ராம்போலாவைத் துரத்தி விட்டனர். செல்வச் செழிப்பில் பிறந்த குழந்தை வீடுவீடாய்ப் பிச்சை எடுத்தது. பார்வதி கோவில் மண்டபத்தில் படுத்துக்கொள்ள அனுமதி தருகிறார் பூஜாரி.

அந்த கிராமத்திற்கு அயோத்தியிலிருந்து சொற்பொழிவாளர் நரஹரிதாஸ் வந்தார்.

பார்வதி கோவிலில் நடந்தநிகழ்ச்சியின் போது தீப்பந்தங்களுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டிய பணி ராம் போலாவுக்கு... அவர் கோவிந்த பட்டாபிஷேகம் பற்றிய நெடும் பாடலைப் பாடி, மறுநாள் அதிலிருந்து ஓரிரண்டு வரிகள் யாரேனும் பாட இயலுமா என்று கேட்டார்.

ஒரு வரி விடாமல், சுருதி பிசகாமல். பாவனையோடு பாடுகிறான் ராம் போலா! நெகிழ்ந்துபோன நரஹரிதாஸ், பையனைத் தனது சீடனாக ஏற்று, அயோத்தியில் இருந்த தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கல்வி கற்பித்தார். உபநயனம் செய்ததோடு மட்டுமல்லாமல், 'துளசிதாஸ்' என பெயர்

சூட்டினார். மேற்படிப்புக்காக அவரை, காசியிலிருந்த சேஷ சனாதனா என்பவரிடம் அனுப்பி, இருமுறை நேரில் வந்தும் பார்த்தார்.

“இல்லறமா, துறவறமா; நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வா! இயல்பான ஆசைகளை அலட்சியம் செய்யாதே!” என்னும் அறிவுரையோடு விடைகொடுத்தார் சேஷ சனாதனர்.

தான் பிறந்த ஊரான ராஜாப்பூருக்கு வந்தார் துளசி தாசர். தந்தை இறந்துவிட்டார். அவரது குதிரை வண்டிக்காரரான வேதாந்தம் வீட்டைப் பராமரித்து வைத்திருந்தார். பெட்டிகளில் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் மட்டுமல்ல, ஒரு பெட்டியில் பொன்னும், தனக்கு சிராத்தம் செய்யும்படி தந்தையார்

எழுதிய உருக்கமான கடிதமும் இருந்தது. பெற்றோருக்கும், தன்னை வளர்த்த சுனியாவுக்கும் ஈமக்கடன்கள் செய்தார். மூவரும் கனவில் தோன்றி ஆசிர்வதித்தனர்.

யமுனைக் கரையிலுள்ள ஒரு விஷ்ணு கோவிலில் அவருக்குப் பிரசங்கம் செய்ய அழைப்பு வந்தது. முதல் நிகழ்ச்சியிலேயே முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ரத்னாவளி என்னும் பெண்ணிடம் மனதை பறிகொடுத்தார். அவளை மணந்து கொண்டார். கணநேரம் கூடப் பிரியாமல் மோகித்துக் கிடந்தார். அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. 'தாரக்' என்னும் பெயர் சுமந்த அந்த குழந்தை காய்ச்சலில் இறந்து விட்டது. பெருந்துயரில் ஆழ்ந்த அவரை, ரத்னாவளி தேற்றினாள். மீண்டும் அவருடைய மோகம் தலைக்கேறி விட்டது.

ஒருமுறை, நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு மனைவியைக் காணவேண்டும் என்னும் ஆசையில், இடிமுழங்கும் மழை இரவில் வீட்டுக்கு ஓடி வந்தார், வழியில் குறுக்கிட்ட ஆற்றில் மிதந்த பிணத்தை ஏதோ கட்டையென நினைத்து, பற்றிக்கொண்டு நீந்தினார். வீட்டு மதிலில் தொங்கிய பாம்பைக் கயிறு என நினைத்து, அதைப் பிடித்து மதிலேறி வீட்டுக்குள் குதிக்கிறார்.

இதைக்கண்ட அவரது மனைவி, “என் உடம்பின் மீது வைத்த ஆசையில், ஒருதுளி இறைவன் மீது வைத்திருந்தால் நீங்கள் அவனையே கண்டிருக்கலாமே!” என்று சீறுகிறாள் மனைவி.

அறிவுக்கண்கள் திறந்தன. மனைவியைக் கைகூப்பித் தொழுது வெளியே வந்தார். கயிலையிலிருந்து ராமேஸ்வரம் வரை ராமனை தேடி அலைந்தார். அனுமனின் உதவியால் ராம தரிசனம் பெற்றார். கன்னங்கரியவன்... சின்னஞ்சிறுவனாய்ச் சிறு வில்லேந்தி வந்த ராமன், அவருக்குச் சந்தனத் திலகமிட்டான். ஒரு மரத்தடியில் இரண்டு முனிவர்கள், ''எல்லோருக்கும் புரியும் மொழியில் ராமாயணம் இயற்றப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?'' என்று பேசிக்கொண்டதைக் கேட்டார்.

கனவில் காசி விஸ்வநாதர் இட்ட கட்டளையின் பேரில், அயோத்தியில் தங்கி மூன்றாண்டுகளுக்குள் 12,800 வரிகள் கொண்ட ''ராம சரித மானஸ்” என்னும் காலத்தால் அழியாத ராம காவியத்தை எழுதி முடித்தார். அக்பரின் நிதியமைச்சரான தோடர்மால் உதவியுடன் நுாலைப் பல படிகள் எடுத்தார்.

ஆபத்திலிருந்து காக்கும் 'அனுமன் சாலீசா' உள்ளிட்ட பல நுால்களை எழுதினார். காசியில் 'சங்கட் மோசன் அனுமன்' கோவிலை நிறுவினார். இறந்தவனை ராம நாமத்தால் உயிர்ப்பித்து அற்புதம் நிகழ்த்தினார்.

காசியிலுள்ள படித்துறை அவர் நினைவாக 'துளசி காட்' எனப்படுகிறது.

இன்றைக்கும் விமரிசையாக நடக்கும் ராம் லீலா நிகழ்ச்சியை அவர்தான் துவங்கி வைத்தார். காசியின் அஸ்ஸி காட்டில் உயிர்நீத்த துளசிதாசரின் புகழ், ராம நாமம் உள்ளளவும் உலகமெங்கும் நிலவும்!

இசைக்கவி ரமணன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us