Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வ பிறவிகள்! (6)

தெய்வ பிறவிகள்! (6)

தெய்வ பிறவிகள்! (6)

தெய்வ பிறவிகள்! (6)

ADDED : மே 04, 2017 03:35 PM


Google News
Latest Tamil News
”நான் காற்றைப் போன்றவன்,

என்னைக் கட்ட நினைக்காதே!

நான் அனைவர்க்கும் சொந்தமானவன்,

என்னை ஆள நினைக்காதே!”

- நீம் கரோலி பாபா


அனுமனின் அவதாரம் என கொண்டாடப்படும் நீம் கரோலி பாபா உத்தர பிரதேசத்தில் பிறந்தார். லட்சுமி நாராயண், லட்சுமண் தாஸ், தாலையா பாபா, மஹராஜ் ஜி, நீப் கரோரி பாபா என்றெல்லாம் அழைக்கப்படும் இவர், யோக ஆற்றல் மூலம் மக்களுக்கு நல்வழி காட்டிய மகான்களில் முக்கியமானவர். அவரைப் பின்பற்றி, பக்தியால் உயர்ந்தவர்களும், ஞானத்தில் சிறந்தவர்களும் பலர் உண்டு. நீம் கரோலி பாபா, ”நான் அடியார்களை உருவாக்குபவன், அடியாட்களை அல்ல!” என குறிப்பிடுவதுண்டு.

இயல்பிலேயே இறையருள் பெற்ற பாபா, 11ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஆன்மிகத்தில் ஈடுபட்டார். தனிமையில் சாப்பிடாமலேயே மலை குகையிலும், நீருக்கடியிலும் தீவிரமாக யோகப் பயிற்சி செய்தார். ஒருமுறை ரயிலில் பயணித்த அவரிடம் டிக்கெட் இருந்தும், ஆடை சரியில்லை என்ற காரணத்தால் கீழே இறக்கப்பட்டார். அதன் பின் என்ன முயற்சித்தும் ரயில் நகரவில்லை! பாபாவை ஏற்றிக் கொண்ட பின்னரே ரயில் புறப்பட்டது! இப்படித் தான் அவர் இளைய யோகியாக உலகிற்கு வெளிப்பட்டார்.

வீட்டை விட்டுச் சென்ற மகனை வரவழைத்த தந்தை துர்கா பிரசாத் சர்மா, திருமணம் செய்து வைத்தார். பாபாவுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகனும் பிறந்ததாகச் சொல்வர். ஒருபுறம் இல்லறத்தானாகவும், இன்னொரு புறம் அலையும் துறவியாகவும் வாழ்க்கை நடத்தினார். இரண்டையும் சரிவர செய்ததில், இரு பாபாக்கள் இருந்தார்களோ என்னும் சந்தேகம் பலருக்கு ஏற்பட்டதாம்!

”ஹனுமான் சாலிஸாவின் ஒவ்வொரு வரியும் ஒரு மஹாமந்திரம்,” என்று அடிக்கடி குறிப்பிடுவார். இவருடைய சொந்த கிராமமான நீம் ரோலியிலிருந்து, கைஞ்சி, ராணிகேத், லக்னோ, பிருந்தாவன் வரையுள்ள பகுதிகளில் 108 கோவில்களை நிறுவினார். அவற்றில் பல ஆஞ்சநேயர் கோவில்களே! மலைவாழ் மக்கள், ஏழை எளியவர்கள், கல்வியறிவு இல்லாதவர்களை பக்தியில் ஈடுபடுத்தி, தன்னுடைய யோக ஆற்றலால் காத்தார்.

”ஆண்டவனைக் காண வேண்டுமானால், ஆசைகளைக் கொன்றுவிடு! அனைவரையும் கடவுளாகப் பார்க்க கற்றுக் கொள்! பிறரை நேசிக்காமல் அவரை அடைய முடியாது'' என போதித்தார்.

சாஸ்திரங்களில் பெண்களுக்கு உயர்ந்த இடம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், சமுதாயத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்டு கிடப்பது கண்டு வருந்தினார். பெண்கள்

அனைவரையும் தாயாகக் கருதி போற்றிய அவர், தான் மையமாக இருந்து செயல்பட்ட அனைத்து ஆஸ்ரமங்கள், கோவில்களில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பெண்களை பங்கேற்கச் செய்தார்.

ஒருமுறை, செல்வந்தர் ஒருவர் பாபாவுக்கு வெள்ளித் தட்டில் தங்கக் காசுகள் வழங்கிய போது அதை ஏற்க மறுத்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கிய தலைவர்களும், சுவாமி சிதானந்தர் போன்ற துறவிகளும் பாபாவை அடிக்கடி தரிசித்தனர்.

யார் தன்னை எப்படிக் கருத வேண்டும் என நினைக்கிறார்களோ, அவரவர் எண்ணப் போக்குக்கு தகுந்தாற்போல் விட்டு விடுவார். பாபாவை இஷ்ட தெய்வத்தின் வடிவில் பார்த்து மூர்ச்சையாக கீழே விழுந்தவர்கள் உண்டு.

பித்துப் பிடித்த மனிதர் இவர் என நினைத்தவர்களும் உண்டு. ஒரே சந்திப்பில் வியக்கத் தக்க மனமாற்றம் ஏற்பட்டவர்களும் உண்டு. அவருடைய ஆன்மிக அறிவு மிகப்பெரியது என்பதால், எதையும் அவரிடம் மறைக்க முடியாது. யாரும் சொல்லாமலே மற்றவர் பற்றிய விபரம் அவருக்குத் தெரிய வரும். எங்கோ நடப்பதை இருந்த இடத்தில் அறிய முடிவதோடு, தேவைப் பட்டால் தலையிடவும் அவரால் முடியும்.

'பாபா தன்னை அறிந்த ஞானியாக' திகழ்ந்தார். ஆனால், தான் யார், தன்னுடைய அடையாளம் எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

மாறாக, அவர் சாதாரண மனிதன் போல உணர்ச்சிகளைக் காட்டி ஆர்வலர்களை திசை திருப்புவதுண்டு! எப்போதும் தெய்வீக நிலையில் இருந்த படியே, நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் நடுவே வாழ்ந்த அதிசயம் அவர்.

சொற்பொழிவுகளில் பாபாவுக்கு நம்பிக்கையில்லை. கம்பளியைப் போர்த்திக் கொண்டு, உடம்பை விசித்திரமான ஒரு கோணத்தில் முறுக்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தபடி, சுற்றி இருப்பவர்களோடு பேசுவார்.

அதில் அன்பு, கண்டிப்பு, அறிவுரை, நகைச்சுவை எல்லாம் கலந்திருக்கும். எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கல்விமான்களும் என பலவித மனிதர்கள் அவரைச் சுற்றி இருப்பர். ஒருவருடைய கேள்விக்கான பாபாவின் பதில், இன்னொருவருடைய கேட்காத கேள்விக்கான விடையாக அமையும்.

”ராமர், கிருஷ்ணர் இவர்களுடைய வடிவங்கள் மறைந்து விட்டன. ஆனால், அவர்களுடைய நாமங்கள் நிலைத்து விட்டன. இறைவனுடைய நாமத்தை இடைவிடாமல் சொல்வதன் மூலம், எதையும் அடைய முடியும், எதையும்!” என்று தலையை அசைத்தசைத்து உறுதிப்படுத்துவாராம்.

”ஓயாமல் ராமா என்று அழைத்துக் கொண்டிரு. ஒருமுறை அவனிடமிருந்து அழைப்பு வரும். அத்தோடு உன் துன்பமெல்லாம் முடிந்து விடும்,” என்று அனைவருக்குமான எளிய மந்திர முறையை எப்போதும் விளக்கி கூறுவார்.

அவரவர் குடும்ப கடமை, சமய, சமூகப்பணிகளில் அக்கறையாக இருக்க வழி காட்டுவார். 'வெற்றிக்கு, கடின உழைப்பு மட்டும் போதாது.

கடவுளின் அருள் இன்றியமையாதது; இறைவனை நம்பு! எவ்வளவு கடினமானதும் எளிய செயலாய் மாறி விடும்,” என அடிக்கடி அறிவுறுத்துவார்.

”எனக்கு மாற்றலாகி விட்டது; அவசர அழைப்பு வந்திருக்கிறது; இந்தக் கோட்டை கொத்தளத்தை விட்டுச் செல்ல வேண்டும்!” என பாபா சொன்னதை அடியவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. அடிக்கடி தனிமையில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். அவரைப் பார்க்க வந்த மருத்துவரிடம்,

”நான் சிறையை விட்டுச் செல்லும் நேரம் வந்து விட்டது,” என்றவர் விருந்தாவனில் ”ஜகதீசா!” என்று மும்முறை சொன்னபடி உடலை நீத்தார். அங்கே அவருக்குக் கோவில் கட்டப்பட்டது.

உத்தர்கண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து 280 கி.மீ.,யில் காத்கோடம். அங்கிருந்து அல்மொரா செல்லும் வழியில் 23 கி.மீ.,யில் நைனிடால். அங்கிருந்து 18 கி.மீ.,யில் கைஞ்சிதாம்(கோவில்) உள்ளது. இங்குள்ள அனுமன் சன்னதியில் காற்றில் கலந்த கனலாக இன்றும் அவர் வாழ்கிறார்.

இங்குள்ள அனுமனில் அவரையும், அவரில் அனுமனையும் தரிசிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us