Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கிருஷ்ண ஜாலம் (14)

கிருஷ்ண ஜாலம் (14)

கிருஷ்ண ஜாலம் (14)

கிருஷ்ண ஜாலம் (14)

ADDED : டிச 30, 2016 11:19 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ண ஜாலத்தில் சிந்தனைக்கு இடமளிக்கும் ஒரு சம்பவத்தைக் காண இருக்கிறோம்.

கோபர்களிடம் ஆண்டுக்கு ஒரு முறை சிவபூஜை செய்யும் வழக்கம் உண்டு. பிருந்தாவனத்திற்கு சற்று தொலைவில் அம்பிகாவனம் என்னும் பகுதி இருந்தது. அங்குள்ள கோவிலில் இருந்த சிவலிங்கத்தை மனிதர்கள் மட்டுமில்லாமல் பாதாளலோகத்தைச் சேர்ந்த பாம்புகளும் வழிபட்டது விந்தை. இந்த பாம்புகள் விரும்பிய வடிவம் எடுக்க வல்லவை.

மனிதர்களைப் போல அவற்றிற்கு ஆறாவது அறிவு இருந்தது. பேசும் சக்தி படைத்த அவை தவத்திலும் ஈடுபடும். இவற்றில் சுதர்சனன் என்னும் மலைப்பாம்பு அம்பிகாவனநாதரான சிவனை வணங்குவதைக் கடமையாகக் கொண்டிருந்தது. பாம்பை விஷ ஜந்துவாக அச்சத்தோடு பார்க்காமல், உயிரின் மூலவடிவமாகப் பார்ப்பது நமக்குள் ஒரு பண்பட்ட நிலையை உருவாக்கும். சில சந்தர்ப்பங்களில் ரிஷிகளின் சாபத்தால், தேவர்களும், கந்தர்வர்களும் பாம்பாக மாறியிருக்கின்றனர். பாம்பாக மாறி விட்டால் சுவாசிப்பது முதல் சாப்பிடுவது, தூங்குவது, பார்ப்பது, உணர்வது என்று எல்லாமே தலையை மையமாகக் கொண்டே நடக்கும். நகர்வதற்கு முழு உடம்பையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதே போல பகல் முழுவதும் இருளில் கிடந்தும், இரவில் வெளியே நடமாடியும் இரை தேட வேண்டியிருக்கும். பார்ப்பவர்கள் பயத்தால் பாம்பைக் கொல்ல முயற்சிப்பர்.

இப்படி வாழ்வில் சிரமப்படுவதை ஒரு பரிகாரமாக ஆக்கி, 'பாம்பாகக் கடவது' என்று சபித்து விடுவார்கள். கிட்டத்தட்ட பாம்புப் பிறப்பே ஒருவகையில் சாபம் தான்.

அப்படிப்பட்ட பாம்பை வணங்கும் போது சாபம் விலகி விடும். அதை துன்புறுத்தினாலோ, அடித்துக் கொன்றாலோ நாம் தோஷம் உள்ளவர்களாக ஆக நேரிடும்.

இப்படி பாம்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. சுதர்சனனும் இப்படி பாம்பாக பிறக்க சாபம் பெற்றவனே.... இவன் ஒரு வித்யாதரன். அதாவது அழகும், கல்வியும் பெற்றவன்.

ஆங்கீரச முனிவர்கள் என்னும் கூட்டத்தினர் கருப்பாக, குட்டையாக இருப்பார்கள். தவத்தில் சிறந்த இவர்களைக் கண்ட சுதர்சனன் பரிகாசமாக சிரித்தான். எப்போதும் நான் என்னும் செருக்குடன் திரிவதும், பிறர் உருவம் கண்டு எள்ளி நகையாடுவதும் பாவமாகும். ரிஷிகளிடம் ஆணவமாக நடந்தால் விளைவு மோசமானதாக இருக்கும். இந்த வகையில் ஆங்கீரச முனிவர்களால் சபிக்கப்பட்ட சுதர்சனன் மலைப்பாம்பாக மாறினான். தனக்கு விமோசனம் தர வேண்டும் என கதறினான்.

“அம்பிகாவனத்தில் நீ கிடக்கும் போது, கிருஷ்ணராக வரும் விஷ்ணுவின் பாதம் உன் மேனியில் பட்டதும் விமோசனம் பெறுவாய்,” என்றனர் முனிவர்கள்.

அதற்கேற்ப சம்பவங்களும் நடக்கத் தொடங்கின.

அம்பிகாவனத்திற்கு நந்தகோபருடன் மற்ற கோபர், கோபியர் அனைவரும் சிவனை வழிபட வந்தனர். அருகிலுள்ள தடாகத்தில் நந்தகோபர் நீராடச் சென்றார். அங்கு மலைப்பாம்பாக இருந்த சுதர்சனன் அவரை விழுங்க முற்பட்டான். நந்தகோபர் எழுப்பிய அபயக்குரல் அம்பிகாவனம் முழுவதும் எதிரொலித்தது. கண்ணன் அங்கு ஓடி வந்தான். காளிங்கன் என்னும் பாம்பை அடக்கி அதன் மீதேறி எப்படி நடனம் ஆடினானோ, அது போல சுதர்சனன் மீது கால் பதித்து கண்ணன் நின்றதும், சுதர்சனன் நந்தகோபரை உமிழ்ந்து விட்டு அழகிய வித்யாதரனாக மாறினான்.

இதைக் கண்ட கோபர்கள் கண்ணனின் பாத சம்பந்த மகிமை அறிந்து மகிழ்ந்தனர்.

கிருஷ்ண விசேஷமே பாதம் தான்! கிருஷ்ண ஜெயந்தியன்று அவனது வருகையை உறுதி செய்யும் விதத்தில் பிஞ்சு பாதங்களைக் கோலமாக இடுகிறோம். மாக்கோலம் என்றாலும் அது கிருஷ்ண பாதங்களே! அவன் பாத தூளி வீடு முழுக்க பட்டால் போதும்.. அதன்பின் கவலையே இல்லை.... எப்போதும் திருவடிகளை நாம் தேடிப் பிடிக்க வேண்டும். அது பெரியோர் திருவடிகளாக இருந்தாலும் சரி, குருநாதரின் திருவடியாக இருந்தாலும் சரி... நாம் அடைக்கலம் புக வேண்டியது அவைகளிடம் தான்!

திருவடிகளே உலகை நாம் தரிசிக்க உதவி செய்கின்றன. அவையே தேகத்தை தாங்கி நிற்கின்றன. இவை இல்லாவிட்டால் நம்மால் பயணிக்க முடியாது. வாழ்வில் தீர்த்த யாத்திரையும், க்ஷேத்திர யாத்திரையும் கடமைகளாகச் செய்யப்பட்டவை. பாரதத்தில் பாண்டவர்கள் வனவாச காலத்தில் இந்த கடமையைத் தான் செய்தனர். மனிதனோ, மிருகமோ உயிர் வாழும் போது, அவனுக்கு உதவுவதற்காக மட்டும் கால்கள் படைக்கப்படவில்லை. கால் இருந்தால் மட்டுமே ஒரு உயிர் மலர்ச்சியுடன் வாழ முடியும்.

உறுப்புகளில் சிறந்த கண் இல்லா விட்டால் காட்சியை மட்டும் தான் இழக்கும். பார்வை இல்லாமல் கூட பிறர் தயவின்றி வாழலாம். ஊன்றுகோல்

துணையுடன் முடிந்த வரை பயணிக்கலாம். ஆனால், கால் இழந்து விட்டால் பிறர் தயவு இல்லாமல் இயற்கை உபாதையைக் கூட கழிக்க முடியாது. உட்கார்ந்த இடமே உலகம் என்றாகி ஒரு குத்துக்கல், நட்ட மரம் போலாகி விடுவோம். எதுவாக இருந்தாலும் அது நம்மைத் தேடி வர வேண்டும். நாமாக எதையும் தேட முடியாது.

இதனால் தான் மிக கொடிய குணம் கொண்டவன் கூட, காலைப் பற்றி விட்டால் இரக்கப்பட்டு பிறருக்குத் துன்பம் செய்வதில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் கால்கள் தேய்வதில்லை. இவ்வளவு சிறப்பு இருப்பதால் உறுப்புகளில் இதற்கு மட்டும் பாத பூஜை என்னும் வழக்கம் உருவாகி இருக்கிறது.

பாதத்துடன் தொடர்பு கொண்ட ரட்சைகள், அதாவது செருப்புகள் கூட மதிக்கப்படுகின்றன. ராமரின் பாதரட்சைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆட்சி

செய்தன. விஷ்ணு கோவில்களில் சுவாமியின் பாதம் பொறித்த கிரீடம் போன்ற ஜடாரியே வழிபாட்டில் பிரதானம்.

இந்த பாதத்தைத் தேடி சரண் புகுவதையே சரணாகதி என்கிறோம். சரணாகதி அடைந்தால் மாயையின் விதியோ, உயிருக்கு துன்பகதியோ உண்டாகாது. இந்தப் பாதங்களைக் கொண்டவனே கிருஷ்ணன். “என்னைத் தேடி அலையத் தேவையில்லை. மனதில் நினைத்தாலே போதும். நான் ஆட்கொண்டு விமோசனம் அளிப்பேன்,” என்கிறான் கிருஷ்ணன். சுதர்சனன் சாப விமோசனம் அடைந்தது இதற்கு சாட்சி.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us