Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கிருஷ்ண ஜாலம் (22)

கிருஷ்ண ஜாலம் (22)

கிருஷ்ண ஜாலம் (22)

கிருஷ்ண ஜாலம் (22)

ADDED : பிப் 24, 2017 10:24 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணன் முதலில் காலயவ்வனனைச் சந்தித்து, அவனை வெல்லத் தீர்மானம் செய்தான். ஆனால், படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களத்துக்குப் போகவில்லை. தான் ஒருவனே போதுமானது என்பது போல தனியே புறப்பட்டான். அதைக் கண்ட பலராமர் ஆச்சரியத்துடன், “கிருஷ்ணா! என்ன இது விஷப்பரிட்சை?” என்று கேட்ட போது சிரித்தான்.

“நீ சிரித்தாலே விஷயம் இருக்குமே?”

“தெரிந்தே கேட்டால் எப்படி அண்ணா?”

“அந்த விஷயம் என்ன என்பதை நீயே வாய் திறந்து சொல்”

“காலயவ்வனனைச் சந்திக்க படை எதற்கு? நான் ஒருவன் போதாதா?”

“கிருஷ்ணா... படையை விட நீ தான் பெரியவன். என் கேள்வி நீ தனித்து சென்று சந்திக்குமளவு அவன் பெரியவனா என்பது தான்!”

“அவன் பெற்ற வரம் பெரியது அல்லவா?”

“அதுவே அவனுக்கு கர்வத்தை உண்டாக்கி விட்டதே?”

“உண்மை தான்... மாயைக்கு மயங்காதவர் உலகில் ஒருவர் கூட இல்லையே?”

“சரி... அது இருக்கட்டும். வரம் அருளும் உன் திருக்கரத்தால் அவனை நீ அழிப்பது சரியா?”

“நான் அழிக்கப் போவதாக எப்போது சொன்னேன்?”

“பின் எப்படி அவனை என்ன செய்யப்போகிறாய்?”

“அது, பிறகு தெரியத் தானே போகிறது,” என்றபடி கிருஷ்ணன் புறப்பட்டான்.

கிருஷ்ணனைக் கண்ட காலயவ்வனன், “யார் இவன்.... ஒரு மனிதன் இத்தனை அழகுடன் இருக்க முடியுமா?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.

அப்போது தான் நாரதர் சொன்னது நினைவுக்கு வந்தது. புன்னகைத்தபடி தன் முன் செல்வது கிருஷ்ணன் தான் என்பது காலயவ்வனனுக்குப் புரிந்தது.

“ஏய்... கிருஷ்ணா நில்... என்னுடன் போரிடாமல் எங்கு செல்கிறாய்?” என்று கேட்டபடி பின் சென்றான். கிருஷ்ணன் அவனுக்கு பதிலளிக்கவில்லை.

கிருஷ்ணன் ஓடத் தொடங்கினான். காலயவ்வனனுக்கு ஆச்சரியம் அதிகரித்தது.

“டேய் கிருஷ்ணா! உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உன்னை 'மாயாவி' என்று சொன்னவர்களும் உண்டு. என்னுடன் போர் புரியாமல் தப்பி விட எண்ணுகிறாயா? அது நடக்காது. நான் உன்னை அழிக்கப் பிறந்தவன். நீ பயந்தோடுவதே எனக்கு கிடைத்த முதல் வெற்றி,” என்றபடி பின்னால் ஓடினான்.

கிருஷ்ணன் அப்போதும் பதிலளிக்கவில்லை.

போர்க்களத்தைக் கடந்து நெடுந்தூரம் வந்த கிருஷ்ணன் ஒரு மலைப்பகுதிக்குள் நுழைந்தான். அவனைக் காலயவ்வனன் பின் தொடர்ந்தான். பெரிய மரங்கள் ஒரு குகையின் வாசலை மறைத்தபடி வளர்ந்திருந்தன.

மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் முட்செடிகள், புதர்கள் காணப்பட்டன. காட்டு விலங்குகளும் கண்ணில் தென்பட்டன. மலைப்பகுதி என்பதால் பாம்புகளுக்கு பஞ்சமில்லை. மிருகங்களை விழுங்கிஇருந்ததால் அவற்றின் வயிற்றுப் பாகம் புடைத்திருந்தது. வீரன் என்றாலும் கூட, காலயவ்வனன் மனதிலும் அச்சம் எழுந்தது.

கிருஷ்ணனோ சிறிதும் பயப்படாமல், மலைக்குகைக்குள் புகுந்தான்.

காலயவ்வனனோ சற்று தயங்கியபடி குகைக்குள் நுழைந்தான். இருள் மிகுந்த குகையில் ஒரு இடுக்கு வழியாக, சூரியஒளி ஊடுருவியதால் அந்த பாகம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கே ஒரு திண்ணை போல பாறை இருந்தது. அதன் மீது ஒருவன் குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன், கிருஷ்ணனாக இருப்பானோ என்று காலயவ்வனன் கருதினான்.

“அடேய் கிருஷ்ணா... இது என்ன மாயாஜாலம்? என்னுடன் போரிடாமல் இப்படி வந்து படுத்து விட்டாயே... மிருகங்கள் நடமாடும் காட்டிற்குள் வரவழைத்து, அவை என்னை விழுங்க வேண்டும் என்று தானே இங்கு வந்திருக்கிறாய். உன்னைக் கொல்லாமல் திரும்பிப் போக மாட்டேன்,” என்று உரத்த குரலில் கத்தினான்.

அவனது பேச்சு குகை எங்கும் எதிரொலித்தது. ஆனால், உறங்கிய மனிதன் சிறிதும் அசையவில்லை.

காலயவ்வனனின் கோபம் அதிகரித்தது.

“அடேய் மாயாவி! எழுந்திருடா!” என்று அருகே சென்று காலணியுடன் தூங்கியவனின் முதுகில் ஓங்கி உதைத்தான். உதைத்த வேகத்தில் பாறையில் இருந்து உருண்ட அவன் அப்போதும் கூட எழுந்திருக்கவில்லை.

காலயவ்வனன் மீண்டும் உதைக்கவும் அவன் தூக்கம் கலைய ஆரம்பித்தது.

உறுமலுடன் எழுந்த அவன் கொட்டாவி விட்டான். அவனது முகத்தில் நீண்ட தாடியும், தலைமுடியும் சிங்கத்தின் பிடரி போல நாலாபுறமும் சிலிர்த்துக் கொண்டிருந்தது.

“இப்படியா பாதி தூக்கத்தில் எழுப்புவாய்? மனித நடமாட்டம் இல்லாத காட்டிற்கு வந்ததே தொந்தரவு இல்லாமல் தூங்கத் தான். ஆனால் அதற்கும் தடை வந்து விட்டதே,” என எழுந்தவன் கண்களைக் கசக்கியபடி காலயவ்வனனைப் பார்த்தான்.

அவ்வளவு தான்!

அடுத்த நொடியே அவனது கண்களில் புறப்பட்ட தீப்பொறி காலயவ்வனனைப் பற்றியது. அலறித் துடித்த அவன், சற்று நேரத்தில் சாம்பலாகக் கிடந்தான்.

தூங்கி எழுந்தவனோ, “அடப்பாவி... என் தூக்கத்தை கெடுத்த நீ சாம்பாலாகி விட்டாயே. இப்படி ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இங்கு வந்தேன்,” என்று முணுமுணுத்தான்.

அப்போது அங்கு குழலோசை கேட்கத் தொடங்கியது.

அதன் இனிமையில் அவனது தூக்கம், கோபம், வருத்தம் எல்லாம் விலகியது.

அவனையும் அறியாமல் கைகள் குவிந்தன. குகையின் ஒருபகுதியில் இருந்த கிருஷ்ணன், குழல் இசைத்தபடி அவன் முன் விஷ்ணுவாக காட்சியளித்தான். அதைக் கண்டு, “எம்பெருமானே! பரந்தாமா... இந்த ஏழைக்கு காட்சியளிக்க வந்து விட்டாயா?” என பரவசநிலைக்கு அவன் ஆளானான்.

“உன் புண்ணியம் என்னை இழுத்து வந்து விட்டது முசுகுந்தா” என்றான் கிருஷ்ணன்.

“ எம்பெருமானே! என்ன சொல்கிறீர்கள்?”

“ஆம்... இந்திரனுக்காக மனைவி, மக்கள், நாடு என எல்லாம் துறந்து அசுரரோடு போரிட்டவன் நீ. உன் உதவி இல்லாமல் இந்திரனால் வெற்றி பெற முடியுமா?”

“ஐயனே! அது எனக்கு கிடைத்த பாக்கியம் அல்லவா?”

“அந்த பாக்கியமே புண்ணியமாகி விட்டது. பூலோக அரசனாக இருந்தாலும், தேவர்களுக்கு உதவிய உன் தயாள குணமும், வீரமும் அசாதாரணமானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் போரில் காலம் கழித்த நீ, நிம்மதியாக உறங்க வரம் பெற்றதும், அது கலைய காரணமானவர் உன் பார்வையால் சாம்பல் ஆக வேண்டும் என்பதும் விதி. இங்கு சாம்பலாகி கிடப்பவன் கர்க முனிவரின் புதல்வன் காலயவ்வனன். என்னை சாம்பலாக்க நினைத்தான். ஆனால்

சாம்பலாகிப் போனான். இதுவும் ஒரு வகையில் நானே சாம்பலானது போலத் தான். என் படைப்பு தானே அவனும்?”

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us