Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சாக்குப்பைக்குள் சங்கரன்

சாக்குப்பைக்குள் சங்கரன்

சாக்குப்பைக்குள் சங்கரன்

சாக்குப்பைக்குள் சங்கரன்

ADDED : பிப் 17, 2017 11:15 AM


Google News
Latest Tamil News
வியாபாரி ஒருவர், தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை, தன் மைத்துனருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார்.

பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த மைத்துனர், ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார்.

தன் மாமா, சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த மைத்துனர், ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி, சிவலிங்கம் போல் வடிவமைத்து, காட்டுப்பூக்களால் அலங்கரித்து, ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார்.

பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது.

வியாபாரி எழுந்ததும், ''மாமா! நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம்... பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள்,'' என்றார். 'எங்கும் சிவமயம்' என்று மகிழ்ந்த வியாபாரியும், தன் மைத்துனர் காட்டிய இடத்திற்கு சென்றார். சிவலிங்கத்தை தரிசித்தார். பின் சாப்பிட்டார்.

அப்போது தான் மைத்துனர், ''மாமா! சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக, ஒரு சாக்குப்பையில் மண்நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும்,'' என்றார்.

''என்ன சொல்கிறீர்கள் மைத்துனரே! நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன்” என்றார் உறுதியாக.

“நம்ப மாட்டீர்களா... சாக்குப்பையை மண்ணில் நட்டு வைத்தது நான் தான்,” என்ற மைத்துனர், அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அது அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட மைத்துனர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகிலுள்ள கூழைய கவுண்டன் புதூரில் ஆகும். இங்கு மொக்கணீஸ்வரர் கோவில் உள்ளது. மொக்கணி என்றால் 'சாக்குப்பை'. மாணிக்கவாசகர், இந்த லிங்கத்தின் பெருமையை, 'மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி' என்று போற்றுகிறார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us