Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/உண்மை வெளி வந்தே தீரும்

உண்மை வெளி வந்தே தீரும்

உண்மை வெளி வந்தே தீரும்

உண்மை வெளி வந்தே தீரும்

ADDED : மார் 17, 2017 01:56 PM


Google News
Latest Tamil News
முனிவர் தேவசர்மாவிடம், விபுலன் என்ற சீடன் படித்து வந்தான். முனிவரின் மனைவி ரிசி அழகாக இருப்பாள். இந்த செய்தி தேவலோகத்தை எட்டியது. ஒருமுறை வேள்வி நடத்த தேவசர்மா வெளியூர் புறப்பட்டார். அப்போது விபுலனிடம், என் மனைவிக்கு பாதுகாப்பாக இரு,” என்று கட்டளையிட்டார்.

முனிவர் இல்லாத நேரத்தில், ரிசியை அடையும் நோக்கத்துடன் தேவலோகத் தலைவன் இந்திரன் மாறுவேடத்தில் வந்தான். இதை அறிந்த விபுலன், அவளைக் காக்க நுண்ணிய வடிவில் அவளது உடலுக்குள் புகுந்தான். இந்திரன் ரிசியைத் தொட முயன்ற போது, அவளது உடம்பில் இருந்து விபுலன் வெளிப்பட்டான். பெண்ணுக்குள் இருந்து ஆண் வந்ததைக் கண்ட இந்திரன் பயத்தில் ஓடிவிட்டான்.

அன்று மாலை தேவசர்மா வீடு திரும்பினார். அவரது மனைவியிடம், இந்திரன் தவறாக நடக்க முயன்றது பற்றி விபுலன் தெரிவித்தான். ஆனால், அவன் அவளது உடம்பில், புகுந்ததை மறைத்து விட்டான்.

இந்நிலையில் தேவசர்மாவுக்கு தெய்வப்பெண் ஒருத்தியிடம் இருந்து அதிசயமலர் கிடைத்தது. அதை ரிசியிடம் கொடுத்தார். அதன் அழகால் கவரப்பட்ட ரிசி, இன்னொரு மலர் வேண்டுமென கணவரிடம் கேட்டாள். விபுலனை அழைத்த தேவசர்மா, அந்தத் தெய்வப்பெண்ணிடம் மற்றொரு மலர் வாங்கி வர கட்டளையிட்டார். அவளிடம் மலரைப் பெற்று திரும்பும் வழியில், விபுலன் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.

ஒரு வீட்டின் திண்ணையில் இரு அந்தணர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர், “நம்மில் யார் மீது தவறோ, அவர்களுக்கு இந்த விபுலனின் கதி நேரட்டும்,” என்றனர்.

தன்னை எதற்காக உதாரணம் காட்டி பேசுகிறார்கள் என்று அறியாத விபுலன் அங்கிருந்து நடந்தான். இன்னொரு வீட்டுத் திண்ணையில் ஆறு அந்தணர்கள் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தனர். சோழிகளை உருட்டியபடி ஒருவர், “யார் நம்மில் மற்றவரை ஏமாற்றி விளையாடுகிறாரோ அவர் இந்த விபுலனின் கதியை அடைவார்,” என்றார்.

இதைக் கேட்ட விபுலன் நடுங்கி விட்டான். குரு பத்தினியின் உடம்பில் புகுந்ததால் பாவத்திற்கு ஆளாகி விட்டோமோ என்ற பயம் ஏற்பட்டது. பின் குருகுலம் வந்த அவன், மலரை குருவிடம் கொடுத்து, கலக்கத்துடன் நின்றான்.

“விபுலா! உனக்கு என்ன நேர்ந்தது?” என்றார் தேவசர்மா.

நடந்த விஷயத்தை மறைக்காமல் விவரித்தான். கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால் குருபத்தினியின் உடம்பில் புகுந்ததை தெரிவித்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

அப்போது தேவசர்மா, “விபுலா! நீ நல்லவன் தான் என்றாலும், ரிசியின் உடம்பில் புகுந்ததை மறைத்தது தவறு. வழியில் நீ கண்ட காட்சி எல்லாம் உன்னை திருத்துவதற்கான முயற்சி தான். முதலில் சந்திந்த இருவரும் இரவு, பகல் என்னும் பொழுதைக் குறிக்கும். பரமபதம் விளையாடிய ஆறு அந்தணர்களும் பருவகாலத்தைக் குறிக்கும். காலக் கண்ணாடியின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது. நம்மால் மறைக்கப்படும் உண்மைகள் என்றாகிலும் வெளியே வந்து விடும். நீ ரிசியின் உடலில் நுழைந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவளைக் காப்பாற்றவே அப்படி செய்தாய். எனவே நீ பயப்பட வேண்டாம். உண்மையை மட்டும் யாரிடமும் மறைக்காதே,” என்றார்.

விபுலன் தேவசர்மாவின் திருவடியில் விழுந்தான்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us