Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனசில் பட்டதை... (4)

மனசில் பட்டதை... (4)

மனசில் பட்டதை... (4)

மனசில் பட்டதை... (4)

ADDED : மே 04, 2017 03:28 PM


Google News
Latest Tamil News
எந்தச் சமயத்தில்

எந்தக் கதவு திறக்குமென்று

யார் தான் சொல்ல முடியும்?

எதைத் திறந்தால்

என்ன கிடைக்கும் என்று

எதை எதையோ

திறக்கிறோம்....

- இது நகுலன் கவிதை.


இந்த பூமியில் முதல் கதவு எப்போது உருவாக்கப்பட்டிருக்கும்? கதவு இல்லாமல் தானே முதலில் பூமி உருவாக்கப்பட்டிருக்கும்?

யார், தன் வீட்டுக்கு முதல் கதவைச் செய்திருப்பார்? யார்- தன் வீட்டின் கதவை நம்பிக்கை, அவநம்பிக்கை சார்ந்த விஷயமாக உணர்ந்திருப்பார்.

சக மனிதர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டதால் கதவு செய்யப்பட்டதா? கதவு செய்த பின்பு சக மனிதர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டதா? நகரத்து

கதவுகளுக்கு அதிக பயன்பாடா? கிராமத்து கதவுகளுக்கு அதிக பயன்பாடா?

கதவுகள் ரூபமானவையா? அரூபமானவையா?

மனசுக்கும் கதவு உண்டு தானே! நம் மனக்கதவுக்கும் சாவி கிடையாது தானே! சாவிகளே இல்லாமல் திறக்கலாம்; பூட்டலாம் தானே! மனக்கதவு

திறப்பதும், மூடுவதும் பிறப்பில் இருந்தே துவங்குவது தானே!

இறப்புக்குப் போன பின்பும் கூட, கல்லறையில் கதவைப் பயன்படுத்துவது நாமாகத் தான் இருக்க முடியும்....

பறவைகள், மிருகங்கள் இவற்றுக்கெல்லாம் கதவு- தேவையில்லாத வஸ்து.

பல வண்ணம், பல வடிவம், பல உயரம், பல அகலம் என பலப்பலவாக அமைகின்றன கதவுகள். எனக்கு நெடுநாள் ஆசை உண்டு. வானத்து கதவு

எப்படி இருக்கும்? பூமி கதவு எப்படி இருக்கும்? காற்று கதவு எப்படி இருக்கும்? கடல் கதவு எப்படி இருக்கும்? நெருப்பு கதவு எப்படி இருக்கும்? நீர் கதவு எப்படி இருக்கும்?

இதையெல்லாம் பார்க்க முடியுமா? இப்படி எனக்கு நெடுநாள் ஆசை உண்டு. ஆறுமாசம் முன்பு கதவற்ற கதவு பார்த்தேன் நான்.

வானத்துக்கும், பூமிக்குமான விஸ்தீர்ணம்.. வெற்றிடம் அந்த இடம் முழுக்க பனிவெளி. அந்த இடம் முழுக்க ஏதோ ஒரு ரூபவெளி. அந்த இடம் முழுக்க ஏதோ ஒரு அரூப வெளி. பசுமைச் செடி, கொடி, பூக்கள்.... ஒவ்வொரு இலையிலும் பனித்துளி. ஒவ்வொரு பனித்துளியிலும் ஒரு மரம். ஒவ்வொரு மரத்திலும் ஒரு வானம். ஒவ்வொரு வானத்திலும் ஒரு பூமி.

சட்டென கதவு திறந்தது எனக்கு. அந்த இடம் ரிஷிகேஷ். கதவு திறந்த போது எனக்கு கிடைத்தது சிவன் தரிசனம். நான் தரிசித்த சிவன் வனாந்தரத்தில் இருந்தார். பனி மூடிய மலைச்சரிவில் தனிமையில் இருந்தார். கையில் கமண்டலம் இல்லாமல், துப்பாக்கி சுமந்து இருந்தார். புலித்தோல் அணியாமல் ராணுவச் சீருடை அணிந்திருந்தார். கைலாயத்தில்- ரிஷிகேசத்தில் 'மொட மொட' சீருடையில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக நின்றிருந்தார். உடுக்கை சத்தத்திற்கு அவர் நர்த்தனம் ஆடவில்லை. ஆடாமல், அசையாமல், கடமையே கண்ணாக நின்றிருந்தார்.

சிவன் தரிசனத்திற்காக ரிஷிகேஷ் சென்றிருந்தேன் நான். கோவில், கோவிலாக ஏறி இறங்கினேன். சரஸ்வதி, வேகவதி, கங்கை சங்கமத்தில் நீராடி சிலிர்த்தேன். மனசெல்லாம் ஏதோ அலாதியான நிம்மதி. 32,000 அடிகள் உயரமான பனிமலை... அமைதி... பேரமைதி... குளிர்... பெருங்குளிர்... பனி...

தெய்வீகப்பனி.

சிவன் எங்கே? சிவன் எங்கே? சிவன் எங்கே?

உள்ளும் புறமும் தேடினேன். மனசில் உயிர்த்துளிகள் மூலமாக தேடினேன். கண்ணின் தவிப்பின் மூலமாகத் தேடினேன். உயிரின் உச்சபட்ச தேடல் மூலமாக தேடினேன்.

கோவில்கள், பனிச்சிகரங்கள் மூலமாக கிடைத்த தெய்வீக தரிசனம் தந்த புளகாங்கிதம் சுகமானது.. அலாதியானது. ஆனாலும், மனசு நிம்மதி அடையவில்லை. நிறைவு அடையவில்லை. கதவு இறுக்கி மூடியதோர் உணர்வில் தவிப்பாக இருந்தது.

ஹெலிகாப்டர் பயணத்தில் கோவில். கோவிலில் சிவன். ஆனாலும், சிவனால் என் மனசுக்கதவு திறக்கவே இல்லை. வாகனத்தில் இறங்கி கீழே நடந்தேன். சாலை ஓரமாக இரும்பால் செய்த கூண்டு. அதில் ஒற்றை ராணுவ வீரர். கையில் துப்பாக்கியோடு பாதுகாக்கும் பணி.

ஈ, காக்கை கூட கிடையாது. இயற்கை உபாதை கழிக்க மறைவிடம் கிடையாது. யாரோடும் பேசவும் முடியாது. ஆளே இல்லாத வனாந்திர தனிமையில், கடமை உணர்வோடு கண் சிமிட்டாமல் நின்றிருந்தாரே- அந்த ராணுவ வீரர். அவரைப் பார்த்த அந்த நொடியில் என் மனசுக்கதவு விரியத் திறந்தது.

பெரு நெருப்பு ஜூவாலையில் சிவன் தரிசனம்- அவர் மூலமாகத் தெரிந்தது எனக்கு. யார் பெத்த புள்ளையோ தெரியவில்லை. என் ஊரில், நம் உயிரின் பாதுகாப்புக்காக பனிமலையில், பனிமழையில் நின்ற அவர் தான் எனக்கான சிவன்.

கடவுள் கோவிலுக்குள் தான் இருக்க வேண்டுமா என்ன?

இன்னும் சொல்வேன்...

ஆண்டாள் பிரியதர்ஷினி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us