Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனசில் பட்டதை... (5)

மனசில் பட்டதை... (5)

மனசில் பட்டதை... (5)

மனசில் பட்டதை... (5)

ADDED : மே 11, 2017 01:48 PM


Google News
Latest Tamil News
மகாத்மா காந்தியின் வேண்டுதல் இப்படி இருந்தது.

''நான் மீண்டும் பிறந்தாக வேண்டும் என்றார். நான் ஒரு பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ அல்லது சூத்திரனாகவோ பிறப்பது

கூடாது. ஒரு ஆதிசூத்திரனாகவே பிறக்க வேண்டும் என்றே இறைவனை வேண்டுகிறேன்...'

காந்திஜி சொன்ன அடுக்குகளை விடவும், அடிமட்டத்தில் இருப்பவர்கள் பெண்கள்.உடனே யாரும் ஆரம்பித்து விட வேண்டாம். பெண்களைத்

தெய்வமாகப் பூஜிக்கிறோம், கோவில்கள் கட்டுகிறோம், பெண்களை நதி என்கிறோம், மொழி என்கிறோம், தேசம் என்கிறோம், புனிதம் என்கிறோம்....

இப்படியாக சொல்லும் எல்லா பெரியோர்களுக்கும் ஒரு வணக்கம்.

நான் பார்க்கும் பெண்கள் பட்டம், பதவி, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள்... நான் பார்க்கும் பெண்கள் பட்டம், பதவி, பொருளாதாரத்தில் குறைந்தவர்கள்... இருவேறு துருவத்து பெண்கள்... ஆனாலும், இருவருக்கும் பெண் வாழ்க்கை ஒன்றாகத் தான் இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் எல்லா பெண்களும் ஒரு இக்கட்டு சூழலால் சூழப்பட்டு இருக்கிறார்கள்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத வாழ்வியல் சூழலால் வருத்தப்படுகிறார்கள்.

எல்லோருக்குமே தங்களின் கண்ணீரைத் துடைக்க ஒரு கரம் தேவைப்படுகிறது.

தங்களின் வார்த்தைகளைக் கேட்க ஒரு காது தேவைப்படுகிறது.

அந்த கரமும், அந்த காதும் இங்கே வெகு அருகில் தான் இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக குடி கொண்ட அந்த தெய்வீகம் என் வாழ்வின் சுகந்தம், என் வசந்தத்தின் சுகந்தம், என் இருப்பின் சுகந்தம்.

ஆண்டாள் எனது ஆதர்சம். ஆண்டாள் எனது சூரியன். ஆண்டாள் எனது சந்திரன். ஆண்டாள் எனது நட்சத்திரம். அவளே எனது காற்று, வானம், பூமி, நீர், நெருப்பு. ஆண்டாள் எனது கவிதை. ஆண்டாள் எனது வார்த்தை. ஆண்டாள் எனது சகலம்.

என் அப்பா நெல்லை கணபதி. அம்மா சுப்புலட்சுமி. இருவருமே நான் பிறந்ததும் என்னைத் தூக்கிக் கொண்டு தரிசனத்திற்கு சென்ற புனித பூமி ஸ்ரீவில்லிபுத்தூர்.

அவள் சன்னிதானத்தில் என்னைக் கிடத்தி, அவள் பெயரையே எனக்கு இட்டு கவிதையும், தமிழுமாகவே என்னை வளர்த்தார்கள்.

ஆண்டாளே எனக்கு உணவானவள். ஆண்டாள் எனக்கு நீரானவள். ஆண்டாளே எனக்கு உயிரானவள். சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும், எனக்கு

ஆச்சரியமானவள் ஆண்டாள்.

எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் பூமாலை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒற்றை பெண்பூ. திருப்பாவை, நாச்சியார் திருமொழி இரண்டுமே சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்னும் தகைமைக்கு மகுடம் சூட்டுபவள்.

மார்கழி மாதத்தின் குளுமைக்கும், பரவசத்துக்கும் காரணம் இயற்கையா?

ஆண்டாளா? இந்த பட்டிமன்றத்திற்கு நான் தரும் தீர்ப்பு ஆண்டாள் என்பதாகும். அவள் குடியிருக்கும் திருக்கோவிலை ஒவ்வொரு துளியாக, ஒவ்வொரு தூணாக, ஒவ்வொரு சிலையாக, ஒவ்வொரு பூவாக, ஒவ்வொரு அற்புதமாக நான் அனுபவித்திருக்கிறேன்.

பதினைந்து வயது சிறுமி தான் ஆண்டாள். குழந்தைமையின் உச்சம். அவளின் பாடல்களோ பெரும் காதல் அனுபவங்களின் உச்சம். இலக்கியமாக, தத்துவமாக, ஆன்மிகமாக, அழகியலாக, அற்புதத்தின் உச்சம்.

இத்தனை நூற்றாண்டுகள் தாண்டியும், அவள் கோபுரமே அரசு சின்னம். இத்தனை நூற்றாண்டுகள் தாண்டியும், அவளது திருப்பாவையே மார்கழியின் ஆன்மிகச் சின்னம்.

என் பாவம் தேயத் தேய நான் நடப்பது ஆண்டாள் கோவில். என் உள்ளம் தோயத் தோய நான் கிடப்பது ஆண்டாள் பாடல். என்னை நானே ஆண்டாளாக வரித்துக் கொள்வேன். என்னை நானே ஆண்டாளாக நினைத்துக் கொள்வேன்.

அந்த கண்ணாடி கிணறு, அந்த சன்னிதானம், அந்த நந்தவனம், அந்த துளசி வாசனை, அந்த மிளகு வாசனை எல்லாமே என்னை எட்டாம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்லும். எட்டாம் நூற்றாண்டின் துளசி வனத்துக்கு இட்டுச் செல்லும்.

''மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்'' இப்படி சொல்லும் தைரியம் ஆண்டாளுக்கு இருந்தது.

''எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுற்றோமே யாவோம்''இப்படி சொல்லும் தைரியம் ஆண்டாளுக்கு இருந்தது.

''உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று''இப்படி சொல்லும் தைரியம் ஆண்டாளுக்கு இருந்தது.

ஆன்மிக புரட்சி பெண்ணாக, இறைமையை எளிமைப்படுத்தியவள் ஆண்டாள். சமூக புரட்சி பெண்ணாக, காதலை பெண்மைப்படுத்தியவள் ஆண்டாள்.

கோவிலுக்குச் செல்வது இறை உணர்வுக்காக மட்டுமல்ல. அந்த இறை சக்தி நமக்குத் தரும் சேதிக்காகவும் தான்.

அதனால் தான் கட்டுப்பாடுகளின் காலத்தில் தன் காதலை, தன் உடல் மொழியை இயல்பானதாக வெளிப்படுத்தி, பொதுமொழிஆக்கினாள் ஆண்டாள். இந்த தைரியம், தெளிவு, தீர்க்கம், துணிவு எல்லாமே மொத்த குத்தகையாக ஆண்டாள் எனக்கு தந்தாள்.

''இவர்க்கென்று மட்டுமே பேச்சுப்படுவேன்'' என்று நான் கை காட்டிய திசையில் இருந்தவர் என் நேசக்கணவர் பாலரமணி. இருபத்தைந்து ஆண்டு காலம் தாண்டிய எங்கள் இல்லறம் ஆண்டாள் தந்தது.

ஆண்டாள் திருக்கோவில்.. காதலின் பெருங்கோவில் கவிதையின் அருங்கோவில்... எனக்கு அதுவே உயிர்க்கோவில்...

இன்னும் சொல்வேன்...

ஆண்டாள் பிரியதர்ஷினி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us