Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்

சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்

சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்

சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்

ADDED : டிச 11, 2007 09:19 PM


Google News
Latest Tamil News
மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமை உணர்ச்சிக்குக் காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் மனப்பிராந்தி. காதல் என்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்திற்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது.

சாவித்திரியும், சத்தியவானும் (திருமணத்திற்கு பின்) கொண்டிருந்தார்களே...அதன் பெயர் தான் உண்மைக் காதல். அதுஅழியாத நித்திய வஸ்து.

இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப்போகாது.

அது தெய்வீகமானது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும்.

பொருளில்லாவிடினும், கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன் முக்தி பதமெய்தலாம். ஆனால், காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.

உயிருக்கும், மனதுக்கும், ஆத்மாவுக்கும் ஒருசேர இன்பமளிப்பதால் காதலின்பம் இவ்வுலக இன்பங்கள் அனைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஒரு பெண் ஒரு ஆணையோ மனம் மாறாமல், உண்மையிலேயே காதல் செய்யும் வழக்கம் ஏற்படுமாயின், காதல் இன்பம் எத்தனை சிறந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பம் சாலவும் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியும் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப ஊற்றாகி, மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும்.

காதல் கோயில் போன்றது. இது மிகவும் தூய்மை கொண்ட கோயில். ஒருமுறை அங்கு போய்ப் பாவம் செய்து வெளியேறியவன், மீண்டும் அதனுள் புகுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us