PUBLISHED ON : மே 01, 2010 12:00 AM
மீண்டும், "ரவுண்டு' கட்டுகிறார் அமர்!
சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, ராஜ்யசபா எம்.பி., அமர்சிங், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள், "சும்மா' கிடந்தார்; இப்போது மறுபடி, இன்டர்நெட்டில், மற்ற தலைவர்கள் குறித்த தாக்குதல் வேட்டையைத் துவங்கி விட்டார்.
சமாஜ்வாடி கட்சியில் இருந்தபோது, அனைத்து கட்சித் தலைவர்களையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வந்த அமர்சிங்குக்கு, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், மற்ற தலைவர்களின் தயவு தேவையாக இருந்தது. சோனியா, மாயாவதி, அத்வானி என ஒவ்வொரு தலைவராக புகழ்ந்து பார்த்தார். யாரும் அவரை அண்ட விடவே இல்லை. அதனால் இரண்டு மாதங்கள் அமைதி காத்தார். இப்போது எந்த, "பின்புலம்' பலமாக அமைந்து விட்டதோ தெரியவில்லை, "இன்டர்நெட் பேஸ்புக்'கில் மீண்டும், தாக்குதல் வேட்டையைத் துவக்கி விட்டார். "ஐ.பி.எல்., பிரச்னையை ஊதிப் பெரிதாக்கியது சரத்பவார் தான். விலை உயர்வு, பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, தெலுங்கானா பிரச்னை ஆகியவற்றை பொதுமக்கள் மறக்க வேண்டும் என்று கருதிய பவார், ஐ.பி.எல்., பிரச்னையை லோக்சபாவில் விவாதிக்கும் அளவுக்குப் பெரிதாக்கி விட்டார். "சரத்பவார், தன்னை விட புத்திசாலியானவர், சாதுரியம் மிக்கவர் என்று, லலித் மோடிக்குத் தெரியாமல் போய்விட்டது. பி.சி.சி.ஐ., தலைவராக ஜக்மோகன் டால்மியா இருந்தபோது, அவரை வெளியேற்றும் வகையில், செயல்பட்டதும் இதே சரத் பவார் தான். இப்போது, மோடியையும் பதவி விலக வைத்து விட்டார். "காங்., தலைவர் சோனியா வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று, முதன் முதலில் பிரச்னை கிளப்பியது பவார் தான். இப்போது அவர்களுடனேயே கைகோர்த்து, அமைச்சராகி விட்டார்!' இப்படி, சரத்பவாரைத் தாக்கத் துவங்கியுள்ள அமர்சிங், இதோடு நிற்க மாட்டார் என, இவரது, "இன்டர்நெட்' ரசிகர்கள் கூறுகின்றனர்.