நெல்லையில் யாதவ மகாசபை மாநில மாநாடு
நெல்லையில் யாதவ மகாசபை மாநில மாநாடு
நெல்லையில் யாதவ மகாசபை மாநில மாநாடு
ADDED : ஏப் 26, 2010 02:12 AM

திருநெல்வேலி:நெல்லையில், யாதவ மகாசபை மாநில மாநாடு நேற்று நடந்தது.
டவுன் பொருட்காட்சி திடலில், மாநாட்டிற்காக கோட்டை வடிவில் பிரம்மாண்ட நுழைவாயிலும், மெகா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. காலையில் மாநாட்டு பந்தல் திறக்கப்பட்டது. தொடர்ந்து யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன், கொடியேற்றினார். மாநாட்டு ஜோதியை தேவநாதன் மகள்கள் ஹரிஸ்மா, ஹரிணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.தென் மண்டல யாதவர் மகாசபை தலைவர் மரியசுந்தரம் யாதவ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலர் நம்பி துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலர் ஊத்துமலை சரவணன், வக்கீல் முத்துகிருஷ்ணன், மாநகர தலைவர் முத்து உட்பட பலர் பேசினர்.மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மதியம் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் வந்ததால், நெல்லை ஜங்ஷன், நெல்லை டவுன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதியத்திற்கு மேல் நெல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நெல்லை டவுன் வழியாக செல்லும் வாகனங்கள் தச்சநல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ முகாம் வசதி உட்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.