உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த படத்திற்கு நீண்ட இடைவெளி விடும் இயக்குனர்கள்…

அடுத்த படத்திற்கு நீண்ட இடைவெளி விடும் இயக்குனர்கள்…

தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி இயக்குனர்கள் அவர்களது அடுத்த படங்களுக்கு நிறையவே இடைவெளி எடுத்துக் கொள்கிறார்கள். வருடத்திற்கு ஒரு படம் என்பதை தாராமாகச் செய்யலாம். ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்வதில்லை.

தமிழில் முன்னணி இயக்குனர்களாக உள்ள சிலரது இடைவெளி ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் என இருக்கிறது. பிரம்மாண் இயக்குனர் என்று பேசப்படும் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 'இந்தியன் 2' படம் 2024 ஜுலை மாதம் வந்தது. யாரும் எதிர்பாராத விதத்தில் படம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. அதன் மூன்றாம் பாகமான 'இந்தியன் 3' படம் என்ன ஆனது என்பதன் அப்டேட் இதுவரை வரவில்லை. கடந்த வருடம் தெலுங்கில் ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' படமும் தோல்வியைத் தழுவியது. அவரது அடுத்த தமிழ்ப் படமாக 'வேள்பாரி' உருவாகும் என்றார்கள். அதன் அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

பாலா இயக்கத்தில் கடைசியாக 'வணங்கான்' படம் 2025 பொங்கலுக்கு வெளிவந்தது. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்து அவர் இயக்கப் போகும் படம் என்பதன் அறிவிப்பு இதுவரையிலும் வரவில்லை.

கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக 'ஜோஷ்வா - இமை போல் காக்க' படம் 2024ம் ஆண்டு வெளிவந்தது. அதற்கடுத்து அவர் இயக்கப் போகும் படம் என்ன என்பதன் அப்டேட் இன்னும் வரவில்லை. நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' எப்போதும் வரும் என்பதும் கேள்விக்குறிதான். நடிப்பதை விட்டுவிட்டு அடுத்த பட இயக்கத்தின் வேலைகளை கவுதம் மேனன் ஆரம்பித்துள்ளதாக ஒரு தகவல் உள்ளது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'மதராஸி' படம் 100 கோடி வசூலித்தும் தோல்வியைத் தழுவியது. ஹிந்தியில் அவர் இயக்கிய 'சிக்கந்தர்' படமும் தோல்வியடைந்தது. அதன் காரணமாக அவரது அடுத்த பட அறிவிப்பு தாமதமாகி வருகிறது.

2017ல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. அந்தப் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி, அவர்களது அடுத்த தமிழ்ப் பட அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இடையில் 2022ல் அப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார்கள். ஆனால், படம் தோல்வியை சந்தித்தது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் 2024ல் விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கோட்'. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க போவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது வரை அந்த படம் பற்றிய எந்த அப்டேட்டும் வரவில்லை.

சில இடைவெளிகளை விட்ட வேறு சில இயக்குனர்கள் அவர்களது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படங்கள் இந்த வருடத்திலோ அடுத்த வருடத்திலோ வெளியாகாலாம். தமிழ் சினிமாவில் தங்களது முந்தைய படங்களின் மூலம் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சில இயக்குனர்களின் அடுத்த படங்கள் தாமதமாவது அவர்களது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !