நட்டி படத்திற்கு எதிரான வழக்கு வாபஸ்
நட்டி நட்ராஜ் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'டிஎன் 2026 '. இதை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கி உள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இந்த படத்தில் அரசியலை கிண்டல் செய்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பாக விஜய் மற்றும், ரஜினியை கிண்டல் செய்து காட்சிகள் இடம் பெற்றது.
இந்த படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது வழக்கு மனுவில், ''தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் நடப்பு அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட டி.என்.2026 என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். நியாயமான தேர்தல் நடத்துவதையும் பாதிக்கும். எனவே, தேர்தல் முடியும் வரை இந்த படத்தை திரையிடுவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்தவரே 'படம் வெளியாகி விட்டதால் எனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்' என்று நீதிமன்றத்தில் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .