அந்த படத்தில் நடித்தது தவறு : கவுதம் கார்த்திக்
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் கவுதம் கார்த்திக். கடந்த 13 ஆண்டுகளில் 16 படங்களில் நடித்துவிட்டார். ஆனாலும், அவருக்கு இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கதை தேர்வு, கால நேரம், தவறான படங்கள் என பல விஷயங்கள் அவருக்கு வரிசையாக தோல்வியை தருகின்றன.
இந்நிலையில், அவர் வில்லத்தனமான ரோலில் நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படம் திரைக்கு வந்துள்ளது. இதுவரை கதைநாயகனாக நடித்தவர், இந்தமுறை அதற்கு நேர் எதிர் ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான், கார்த்தி நடித்த கொம்பன் உள்ளிட்ட கதைகள் முதலில் இவரை தேடிதான் வந்ததாம். ஆனால், கதை சரியில்லை என கவுதம் கார்த்திக் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்தவர் முத்துராமலிங்கம் படத்தில் நான் நடித்து இருக்க கூடாது. அந்த கதையை தேர்வு செய்தற்காக வருத்தப்படுகிறேன். அறிவின்மையாலும், புரிதல் இன்மையாலும் அந்த படத்தில் நடித்தேன். அது பெரிய தோல்வியை தந்துவிட்டது. பின்னர், அந்த மாதிரி ஜாதி படங்களை தவிர்த்துவிட்டேன். பின்னர் இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் படத்தில் நடித்தேன். இப்போதும் அப்படிப்பட்ட மாஸ் படங்களில் நடிக்க பயமாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2017ல் வெளியான முத்துராமலிங்கம் படத்தை ராஜதுரை இயக்கியிருந்தார். கவுதம் கார்த்திக், நெப்போலியன், பி்ரியா ஆனந்த் உட்பட பலர் நடித்து இருந்தனர்.