17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ்
சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் வெளியானது. கயாடு லோகர் கதாநாயகியாக நடித்த இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையாக ஒரு பீரியட் படமாக இது வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக நடிகர் பிரித்விராஜ் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் இயக்கிய 'ஜன கன மன' படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படத்தில் நடித்தது குறித்து பிரித்விராஜ் பேசும்போது, கடந்த 17 வருடங்களுக்கு முன்பே இந்த படத்தின் கதாசிரியரான சுரேஷ் தன்னிடம் இந்த கதையை சொன்னார் என்றும் அந்த காலகட்டத்தில் இதன் பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் அப்போதைக்கு இந்த படத்தை தள்ளி வைத்ததாகவும் அவர் கூறினார். சமீபத்தில் அதன் கதை அமைப்பில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டு தனது நண்பன் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நானும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.