பெத்தியில் ராம்சரணுடன் ஆடப்போவது சம்யுக்தா அல்ல ஸ்ருதிஹாசன்
ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் பெத்தி. இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் முதலில் மார்ச் 27, பின்னர் ஏப்ரல் 30 என இரு முறை தேதி அறிவிக்கப்பட்டு தற்போது ஜூன் மாதம் வெளியாகும் என புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு காரணம் இந்த படத்தில் இன்னும் ஆறு நாட்கள் படப்பிடிப்பு, அதிலும் குறிப்பாக நான்கு நாட்கள் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட இருக்கிறதாம். இந்த சிறப்பு பாடலில் ஒரு பிரபல நடிகையை ஆட வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் அதனால் தான் இந்த தாமதம் என்றும் சொல்லப்பட்டது.
இந்த பாடலில் மிருணாள் தாக்கூர், மானசா வாரணாசி ஆகியோர் ஆட இருப்பதாக சொல்லப்பட்டு பின்னர் சமீபத்தில் நடிகை சம்யுக்தா இந்த பாடலில் ஆட போகிறார் என்று ஒரு செய்தி பரவியது. இந்த நிலையில் சம்யுக்தாவும் இல்லை, இந்த பாடலுக்கு ராம்சரணுடன் ஆடப் போகிறவர் ஸ்ருதிஹாசன் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான எவடு என்கிற படத்தில் ராம்சரணுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.