பிளாஷ்பேக்: இந்தியா - இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம்
தமிழ் திரைப்பட உலகிற்கு பல முதன்மைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்களுக்கு உண்டு என்றால் அது மிகையன்று.
ஒரு படத்தின் கதை - வசனம் இசைத்தட்டில் ஒலிப்பதிவு செய்து, வெளியிட்ட முதல் திரைப்படம் “பராசக்தி”. முதன் முதலாக ஒரு கதாநாயக நடிகனுக்கு 'கட் அவுட்' வைக்கப்பட்டதும் நடிகர் சிவாஜிகணேசனுக்குத்தான். அவர் நடித்த “வணங்காமுடி” திரைப்படத்திற்காக. தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் வெளிவரும் முன்பே, அத்திரைப்படத்தின் 'டிரைலர்' வெளியிடும் வழக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததும் இவரது “திரும்பிப்பார்” திரைப்படத்திற்காகத்தான். பாடல்களே இல்லாமல் வெளிவந்து அந்நாளில் ஒரு பெரும் பரபரப்பையே உண்டு பண்ணிய முதல் திரைப்படமும் இவரது “அந்தநாள்” திரைப்படம். வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் திரைப்படம் என்றால் அதுவும் இவர் நடிப்பில் வெளிவந்த “சிவந்த மண்”.
இப்படி வரிசைக்கட்டி பல முதன்மைகளைத் தந்த இவரது திரை வரிசையில் இணைந்த மற்றுமொரு திரைச்சித்திரம்தான் “பைலட் பிரேம்நாத்”. இந்திய - இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவான முதல் தமிழ் திரைப்படம் என்ற அடையாளத்தோடு வந்த இத்திரைப்படத்தின் நாயகனும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனே.
“பார் மகளே பார்”, “வியட்நாம் வீடு”, “ஞான ஒளி”, “கௌரவம்”, “தங்கப்பதக்கம்” போன்ற சிவாஜியின் வெற்றித் திரைக்காவியங்கள் எல்லாமே மேடை நாடகங்களிலிருந்து திரை வடிவம் பெற்றவை. அது போலவே ஆர் வெங்கட் எழுதிய “மெழுகு பொம்மைகள்” என்ற மேடை நாடகம்தான் “பைலட் பிரேம்நாத்” என்ற பெயரில் திரைவடிவம் பெற்றிருந்தது. இந்திய - இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தன. இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்சேகா நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தவர் இயக்குநர் ஏ சி திருலோகச்சந்தர்.
“மெழுகு பொம்மைகள்” என்ற நாடகத்தில் நடிகர் ஏ ஆர் சீனிவாசன் ஏற்று நடித்திருந்த அந்த முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், கண்ணிழந்த மகளாக நடிகை சச்சு நடித்திருந்த அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்த இத்திரைப்படத்தின் இசையை எம் எஸ் விஸ்வநாதன் வழங்கியிருந்தார். படத்தின் பாடல்களில் ஒன்றான “அழகி ஒருத்தி நடந்து வந்தாள் கொழும்பு வீதியிலே” என்ற பாடலை இலங்கையின் புகழ்பெற்ற 'பைலா' இசைச் சாயலில் அமைத்துத் தந்திருப்பார்.
1978 தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம், இலங்கையில் 250 நாள்கள் வரை ஓடி பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தமிழகத்தில் ஒரு மிதமான வெற்றியைப் பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்திருந்தது. இத்திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு, நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜியின் “சுரேஷ் ஆர்ட்ஸ்” தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து, 1981ம் ஆண்டு வெளிவந்த “தீ” திரைப்படமும், இந்தியா - இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.