மோகன்லால் படத்தை இயக்காமல் தலைமறைவானேனா ? சூசமாக இயக்குனர் பதிலடி
மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து 'அதிமனோகரம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் தருண் மூர்த்தி.
சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு தகவலை பகிர்ந்து கொண்ட மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூறும்போது, 'இந்த படத்தை முதலில் ஒரு புதிய இயக்குனர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விட்டார். அவர் அழுத்தம் காரணமாக பயந்துவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். அதனால்தான் மோகன்லால் புதிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு தயங்குகிறார்” என்று கூறியிருந்தார்.
அவர் பெயரை குறிப்பிடாமல் இந்த தகவலை சொன்னாலும் ஏற்கனவே கடந்த வருடம் ஆசிப் உஸ்மான் தயாரிப்பில் ஆஸ்டின் டான் தாமஸ் என்பவர் இயக்கத்தில் மோகன்லால் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என ஒரு அறிவிப்பு வெளியானது. அதனால் தற்போது பலரும் அந்த இயக்குனர் ஆஸ்டின் தான் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஆஸ்டின் இதுகுறித்து யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “சிலர் சிறிய அலங்காரங்கள் மற்றும் மூடி மறைப்புகள் மூலம் உண்மையை மறைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல எது உண்மையோ அது வெளிப்படும். எது பொய்யோ அது மறைந்துவிடும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் சொன்ன கருத்து பொய் என்று அவர் சூசகமாக மறுத்துள்ளார் என்றே தெரிகிறது.
அதுமட்டுமல்ல இன்னொரு பதிவில் கொடைக்கானலில் உள்ள ஒரு முக்கியமான இடமான மூஞ்சிக்கல் என்கிற இடத்தின் வழிகாட்டி பலகையை அவர் பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் மூஞ்சிக்கல் என்றால் அவமானம் அல்லது ஏமாற்றம் என்று அர்த்தம் என்பதால் தன்னை தப்பி ஓடிவிட்டதாக கூறிய தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இப்படி ஒரு குறியீட்டை பதிவாக வெளியிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.