உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : விதவை மறுமணத்தை துணிச்சலாக பேசிய விசு

பிளாஷ்பேக் : விதவை மறுமணத்தை துணிச்சலாக பேசிய விசு

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இருந்த பல கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த பல படங்கள் வெளிவந்திக்கிறது. ஆனால் குடும்பத்திற்குள் இருக்கும் பெண்ணிய கட்டுப்பாடுகளை சாஸ்திர சம்பிரதாயங்ளை உடைத் தெறிந்தவர் விசு.

அவரது படங்களில் முக்கியமானது 'சகலகலாசம்பந்தி'. தனது மகள் ரஞ்சனியை நல்ல முறையில், நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார். மகளை கட்டிக்கொடுத்த வீட்டுக்கு அவர் மகளை சென்று பார்க்கும்போது, தனது மருமகனின் அக்கா சரண்யா விதவை கோலத்தில் நிற்பதையும், அந்த குடும்பத்தார் அவளை ஒதுக்கப்பட்டவளாக வைத்திருப்பதையும் அறிகிறார். அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அந்த முடிவின் நியாயத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு புரிய வைத்து எப்படி அதனை செய்து முடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

விதவைகள் மறுமணத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்த காலத்தில் துணிச்சலாக இந்த கருத்தை முன் வைத்து படத்தை இயக்கினார். விதவை மறுமணம் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், அவைகள் விதவை மறுமணம் குறித்து சமூக சூழலைப் பற்றி பேசியது. 'சகலகலா சம்பந்தி' மட்டும்தான் குடும்பத்திற்குள் உள்ள சூழலை பேசியது. எந்த சமூக மாற்றமும், குடும்பத்திற்குள் இருந்துதான் உருவாக வேண்டும் என்பதையும் படம் வலியுறுத்தியது.

கேஆர்ஜி தயாரித்த இந்தப் படத்தில் விசு, ரஞ்சனி, சந்திரசேகர், டெல்லி கணேஷ், திலீப், இளவரசன், மாதுரி, குட்டி பத்மினி, மனோரமா, சரண்யா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !