ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு
தமிழில் 'ஏஸ், மதராஸி' படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். கன்னடத்தில் 'டாக்சிக்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் இயக்க, ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்குப் படமான 'டிராகன்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ருக்மிணி வசந்த்தின் ஆபாசமான பிகினி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு முன்பும் சில நடிகைகளின் வீடியோக்கள், புகைப்படங்கள் இப்படி வெளியாகியுள்ளது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு அவை பரப்பப்படுகின்றன. அது போன்றே தற்போது ருக்மிணி வீடியோவையும் உருவாக்கி பரவ வைத்துள்ளார்கள்.
இது குறித்து ருக்மிணி வசந்த், “என் குழுவினரும் நானும் ஆன்லைனில் பரவி இருக்கும் ஏஐ.,யால் உருவாக்கிய படங்களைப் பார்த்தோம். அவை என்னுடையவை என்று கூறப்படுகின்றன. இந்தப் படங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இத்தகைய மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதும், பரப்புவதும் மிகவும் பொறுப்பற்ற செயல் மற்றும் தனியுரிமையின் மீதான மீறல் ஆகும். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்தப் படங்களை உருவாக்கிய மற்றும் பரப்பியவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை மற்றும் சைபர் குற்ற நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்.
இத்தகைய உள்ளடக்கங்களைப் பகிர்வதையோ அல்லது ஈடுபடுவதையோ அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.