உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள்

நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள்

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். நடிகர் செந்தில் உடன் அவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அவரது நக்கல், நய்யாண்டி பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. நேற்று தனது 87வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். அவரைப் பற்றி பலரும் அறிந்திராத விஷயங்களை பார்ப்போம்...

* கவுண்டமணி நாத்திகவாதி போல தெரிந்தாலும், தீவிர பெருமாள் பக்தர். ஒரு காலத்தில் அடிக்கடி திருப்பதி சென்று கொண்டிருந்தார். சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கும் சென்று வந்தார். இப்போது சாய்பாபாவையும் வணங்குகிறார்.

* இதுவரை அவர் யாருக்கும் பேட்டி கொடுத்தது இல்லை. பேட்டி என்றால் என் பக்கம் வராதீங்க என்று நிருபர்களிடம் சொல்வார். ஆனால், அவருக்கு நெருக்கமான நண்பர்கள், நிருபர்களை அடிக்கடி ஆபீஸ் அழைத்து பேசுவார்.

* அவர் வாழ்க்கை வரலாற்றை சிலர் எடுக்க நினைத்தார்கள். ஆனால், எதுக்கு அதை எழுதி, படமாக்க வேண்டும். அதை நான் விளம்பரப்படுத்த நினைக்கவில்லை என கவுண்டமணி மறுத்துவிட்டார்.

* அந்தகால நடிகர்களில் சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன் ஆகியோர் அவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர் அடிக்கடி போனில் பேசுவது சத்யராஜிடம் தான்.

* முதல்வர் விஜயுடன் ரசிகன், கோயமுத்துர் மாப்பிள்ளை ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் காமெடிக்கு விஜய் தீவிர ரசிகர். கவுண்டமணி மனைவி இறந்தபோது விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பொதுவாக அரசியல் விஷயங்களில் இருந்து விலகி நிற்கும் கவுண்டமணி, விஜய் முதல்வர் ஆனதற்கு வலிய வாழ்த்து சொன்னார்

* கவுண்டமணிக்கு 2 மகள்கள். பேரன், பேத்தி என சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், அவர்கள் போட்டோ, வீடியோ எதுவும் வெளியே வராது. அதை விரும்பவும் மாட்டார்.

* முன்பு அசைவம் சாப்பிட்டவர், இப்போது சைவத்துக்கு மாறிவிட்டார். பண விஷயத்தில் கறார் பார்ட்டி. யாரையும் ஏமாற்றமாட்டார். படப்பிடிப்பில் செலவு வைக்க மாட்டார். ஆனால், சம்பளத்தை சரியாக வாங்கி விடுவார். இல்லாவிட்டால் டப்பிங் பேசமாட்டார்.

* ‛சர்வர் சுந்தரம்' உட்பட பல கறுப்பு வெள்ளை படங்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும், அவரை அடையாளம் காண்பித்தது பாரதிராஜாவின் ‛16 வயதினிலே'. அந்த படத்தில் அவர் நடிக்க காரணமாக இருந்தவர் பாக்யராஜ். அதனால், பாரதிராஜா, பாக்யராஜ் மீது தனி மரியாதை பாசம் உண்டு

* இளையராஜாவும் இவரும் நாடககால நண்பர்கள். இளையராஜாவை விட கவுண்டமணி மூத்தவர். அவரை ராஜா என பெயர் சொல்லி அழைக்கும் சிலரில் இவரும் ஒருவர்.

* கவுண்டமணியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன். இருவரும் இணைந்து ஒரு விழாவில் கலந்து இருக்கிறார்கள். வாத்தியராக கவுண்டமணி நடிக்க, சிவகார்த்திகேயன் மாணவராக நடிக்க ஒரு கதை உருவானது. சில காரணங்களால் அது நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !