தெலுங்கில் சாதித்த பாரதிராஜாவின் அறிமுகங்கள் டாக்டர் ராஜசேகர், சுதாகர்
மறைந்த இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகர்கள் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் முத்திரை பதித்தார்கள். அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி நடித்துள்ளார்கள். ஆனால், தமிழை விட தெலுங்கில் பிரபலமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் அறிமுகமான சுதாகர், மற்றொருவர் 'புதுமைப் பெண்' படத்தில் அறிமுகமான டாக்டர் ராஜசேகர்.
சுதாகர், தமிழில் தொடர்ந்து பாரதிராஜாவின், “நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம்,” ஆகிய படங்களில் நடித்தார். மேலும், 20 தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் கதாநாயகனாக நடித்து தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானார்.
பாரதிராஜா மறைவுக்கு நேற்று வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். அதில், “என்னோட முதல் படம் 'கிழக்கே போகும் ரயில்'ல வாழ்வு கொடுத்தது பாரதிராஜா சார். அவரு இறந்து போனது ரொம்ப கஷ்டமா இருக்கு. 'நிறம் மாறாத பூக்கள், கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம்' என 20 படங்கள் தமிழில் நடித்திருக்கிறேன். எனக்கு வாழ்வு கொடுத்த பாரதிராஜா இறந்து போனது மனசுக்கு கஷ்டமாயிருக்கு. அவர் ஆத்மா சாந்தி அடையணும்,” என்று கூறியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் 1984ல் வெளிவந்த 'புதுமைப் பெண்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர். அதன்பின் ஒரே ஒரு தமிழ்ப் படத்தில் மட்டும் நடித்துவிட்டு 'பிரதிகடனா' என்ற தெலுங்குப் படம் மூலம் அங்கு அறிமுகமானார். அதன் பின் பல தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாரதிராஜா சார் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அவருடன்தான் எனது திரைப்பயணத்தைத் தொடங்கினேன். அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதை அறியும்போது, என்ன சொல்வதென்றே தெரியாமல் தவிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர்; அவரை அறிந்திருப்பதிலும் அவருடன் பணியாற்றியதிலும் நான் பெருமை கொள்கிறேன். இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமை அவரது அன்புக்குரியவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டோம், அவரை நாம் மிகவும் மிஸ் செய்வோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.