உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரான்ஸ் கார் ரேஸில் அஜித் அணி : நேரில் பார்த்த இயக்குனர் விஜய் சிலிர்ப்பு

பிரான்ஸ் கார் ரேஸில் அஜித் அணி : நேரில் பார்த்த இயக்குனர் விஜய் சிலிர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கார் பந்தயத்தில் பிஸியாக இருக்கிறார் அஜித். அதை நேரில் சென்று பார்வையிட்ட இயக்குனர் விஜய் வெளியிட்ட அறிக்கை : வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) போட்டியை நேரில் கண்டு, அதை பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித்திற்கு எனது நன்றி.

​1923 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் 24 மணி நேர லெ மான்ஸ் வெறுமனே கார் பந்தயம் மட்டுமல்ல! உலகின் மிகவும் பெருமைமிக்க, கடினமான மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். மோட்டார் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், லெ மான்ஸில் போட்டியிடுவது என்பது திறமையும் துணிச்சலும் சோதிக்கப்படும் சவாலான இடம். அத்தகைய சவாலை அஜித் எதிர்கொள்வதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையான தருணம்.



​லெ மான்ஸ் போட்டி வாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற 3 மணி நேர கடினமான எண்ட்ரேன்ஸ் பந்தயத்தில் அஜித் ரெடண்ட் ரேசிங் போட்டியிட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேடையில் போட்டியிடும் முதல் இந்திய அணியாக அஜித், கார்த்திக் நரேன், ஆதித்யா பட்டேல் மற்றும் ரோமேன் வோஸ்னியாக் ஆகியோர் இந்தியாவின் கனவுகளையும் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ளனர்.

​இது அஜித்தின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கும் வரலாற்றுத் தருணமாகும். எதிர்காலத்தில் இந்தியாவின் சர்வதேச மோட்டார் விளையாட்டு பயணம் குறித்து பேசப்படும் போது, லெ மான்ஸில் அஜித் பங்கேற்றது முக்கிய திருப்புமுனை சாதனையாக நினைவுகூரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



லெ மான்ஸ் மிச்செலின் கப் போட்டியின் LMP3 பிரிவில் அஜித் ரெடண்ட் ரேசிங் அணியில் கார் எண் 36-ஐ ஓட்டிய கார்த்திக் நரேன் மற்றும் ஆதித்யா பட்டேல் Pro பிரிவில் 13-வது இடத்தை (P13) பெற்றனர். கார் எண் 16-ஐ ஓட்டிய அஜித் மற்றும் ரோமேன் வோஸ்னியாக் Pro-Am பிரிவில் 9-வது இடத்தை (P9) பெற்று சிறப்பான முடிவை பதிவு செய்தனர்.

​அஜித் மற்றும் அவரது அணியினருக்கு மேலும் பல வெற்றிகள், மறக்க முடியாத பந்தய அனுபவங்கள் மற்றும் தொடர் சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !