'கருப்பு' பைனான்ஸ் பிரச்னை: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மே மாதம் 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. உலகம் முழுவதும் 340 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள படம்.
இப்படம் மே 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஒரு நாள் தள்ளி மே 15 அன்று வெளியானது.
தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கத் தலைவரும், வினியோகஸ்தரும், தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கருப்பு' பைனான்ஸ் பிரச்னை குறித்து பேசும் போது இயக்குனர் ஆர்ஜே பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கும் பதிலளிக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் நேற்று ஒரு 'நன்றி அறிக்கை'யை வெளியிட்டுள்ளது.
அதில் பைனான்ஸ் பிரச்சனை குறித்து, “ஒரு தயாரிப்பு நிறுவனமாக, எங்கள் திரைப்படங்களின் வணிக மற்றும் நிதி சார்ந்த அனைத்து அம்சங்களுக்கும் நாங்களே முழுப் பொறுப்பேற்கிறோம். இதற்காக நாங்கள் ஒருபோதும் மற்றவர்களைப் பொறுப்பாக்கியதில்லை. நிதி விவகாரங்கள் குறித்த பொது விவாதங்களையும் ஊகங்களையும் நாங்கள் காண்கிறோம். ஆனால், இத்தகைய விஷயங்கள் திரைப்பட உருவாக்கத்தில் உள்ள கூட்டு முயற்சியின் சிறப்பை மறைத்துவிடுவதுடன், ஒரு திரைப்படத்தை ரசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியையும் கெடுத்துவிடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இன்று எங்கள் கவனம் நாங்கள் எதிர்கொண்ட சவால்கள் மீதல்ல; மாறாக, 'கருப்பு' படத்தின் வெற்றியை கொண்டாடுவதிலும், அதன் பயணத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிப்பதிலும் தான் உள்ளது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய திரைப்படம், கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய அனைவரையும் நாம் கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளது.
படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி குறித்து, “இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவரது குழுவினர் இல்லையென்றால், 'கருப்பு'வின் பயணமும் அதற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் சாத்தியமாகியிருக்காது. ஒரு இயக்குநராக, இப்படத்தின் ஆன்மாவையும் உணர்வையும் இன்றுவரை அவர் தனி ஒருவராகக் கட்டிக்காத்து வந்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள்,” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோருக்கு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் என மொத்தம் 4 கார்களை பரிசளித்துள்ளார் படத்தின் நாயகன் சூர்யா.
தயாரிப்பு நிறுவனம் அதன் பைனான்ஸ் பிரச்னை குறித்த விளக்கத்தைக் கொடுத்துவிட்டதால் இனி மற்றவர்கள் அது பற்றிப் பேசிப் பயனில்லை.