பிளாஷ்பேக்: 'காதல் மன்னன்' ஜெமினிகணேசனுக்கு கலையுலக விலாசம் தந்த “மிஸ் மாலினி”
பட்டப் படிப்பு படித்து முடித்துவிட்டு, சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்ற ஆவலோடு சென்னைக்கு வந்த ராமசாமி கணேஷ் என்ற இளைஞருக்கு ஜெமினி ஸ்டூடியோவில் கிடைத்த வேலை என்னவோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் வேலை. வேலைக்கு சேர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றிருந்த நிலையில், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து, மன மகிழ்வோடு ஒப்பனை அறைக்குச் சென்று, இயக்குநர் சொன்னபடி ஒப்பனை செய்து கொண்டு திரும்பினார் கணேஷ்.
'மிஸ்டர் சம்பத்' என்ற கதாபாத்திரத்திற்கான சோதனைப் படம்தான் இப்போது எடுக்கப் போகின்றேன் எனக் கூறி, படம் பிடித்தார் படத்தின் இயக்குநர். நடித்துக் கொடுத்தார் ராமசாமி கணேஷ். ஆனால் “மிஸ் மாலினி” என்ற அந்தப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது 'மிஸ்டர் சம்பத்' என்ற அந்தக் கதாநாயக கதாபாத்திரம் ராமசாமி கணேஷ{க்கு கிடைக்கவில்லை.
“மிஸ் மாலினி” படக் கதைக்குள் ஒரு சினிமா கம்பெனி, சினிமா இயக்குநராக நடிக்க வந்தவர் ஒரு புதுமுக பட்டதாரி இளைஞர். ஜெமினி ஸ்டூடியோவை சுற்றிப் பார்க்க வந்த இவர், ஸ்டூடியோ அதிபரான எஸ் எஸ் வாசனைப் பார்த்து, அதுவரை அவர் எடுத்திருந்த படங்களில் உள்ள குறைகளை எல்லாம் பட்டியலிட்டு விமர்சனம் செய்ய, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த எஸ் எஸ் வாசன், அந்த இளைஞரைப் பார்த்து நீங்கள் சினிமாவில் ஆக்ட் பண்ணுகிறீர்களா? என கேட்க, அவரும் ஓ… நடிக்கின்றேன் என தலையசைக்க, “மிஸ் மாலினி” படத்தில் வரும் சினிமா இயக்குநருக்கான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டது.
அந்த இளைஞரின் பெயர் வி சீதாராமன். இவர்தான் பின்னாளில் தமிழ் திரையுலகில் ஒரு போற்றுதலுக்குரிய திரைக்கதாசிரியராகவும், நடிகராகவும் விளங்கி கலையுலகினரால் 'ஜாவர்ட்' சீதாராமன் என அழைக்கப்பட்டார். படத்தில் இவருக்கு அசிஸ்டெண்ட் இயக்குநராக நடிக்கும் கதாபாத்திரம்தான் கிடைத்தது நாயகனாக நடிக்க விரும்பிய ஆர் கணேஷூக்கு. இந்த கணேஷ்தான் பின்னாளில் தமிழ் திரையுலகின் 'காதல் மன்னன்' என அழைக்கப்பட்ட நடிகர் ஜெமினிகணேசன். இந்த திரைப்படம்தான் நடிகர் ஜெமினிகணேசன் நடிப்புலகிற்குள் நுழைய காரணமான இவரது முதல் சினிமா பிரவேசம்.
படத்தின் நாயகனாக “மிஸ்டர் சம்பத்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகரும், இந்தப் படத்தின் திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குநருமான கொத்தமங்கலம் சுப்பு. ஹிந்தி நடிகை ரேகாவின் தாயாரான நடிகை புஷ்பவல்லிதான் படத்தின் நாயகி. இவரும் நடிகர் ஜெமினி கணேசனின் இல்லத்தரசியரில் ஒருவர். “மிஸ்டர் சம்பத்” என்ற தலைப்பில் ஆர் கே நாராயண் எழுதிய ஆங்கில எள்ளல் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், நடிகர் ஜெமினிகணேசனின் நடிப்புலகப் பயணத்தின் ஆரம்பப் புள்ளியாக அமைந்து, பின்னாளில் “காதல் மன்னன்” என கலையுலகினாரால் போற்றப்பட்டு, எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரும் நடிகர்களுக்கு இடையே ஒரு தனிப்பாதை அமைத்து, அவர்களுக்கு இணையான தொடர் வெற்றித் திரைப்படங்களைத் தந்து ஒரு தனிப்பெரும் ஆளுமை ஆனார். 1947ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று வெளிவந்த அவரது முதல் திரைப்படமான இத்திரைப்படம் அன்றைய நாளில் பெரும் வெற்றியையும் பெற்றிருந்தது.