பாலகிருஷ்ணா படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்!
தெலுங்கில் கடந்த 2023ம் ஆண்டில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் 'பகவந்த் கேசரி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த காஜல் அகர்வால் இப்போது பாலகிருஷ்ணா நடித்துவரும் 111வது படத்திலும் அவருக்கு ஜோடியாகி உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வாலின் பிறந்தநாளில் இந்த படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், பாலகிருஷ்ணன் 111வது படம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ''இந்த பாலகிருஷ்ணா 111வது படத்தில் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன். பாலையா உடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு ஜாம்பவான் அவர் மிகவும் கலகலப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் சூழலை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பார். மேலும் இந்த படத்தில் இதுவரை செய்திராத மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் வித்தியாசமானது, சுவாரஸ்யமானது. இது ஒரு வலிமையான கதாபாத்திரம். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இத்தகைய வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று உண்மையிலேயே நான் கனவில் கூட நினைக்காத ஒரு விஷயம்'' என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.