உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் : அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்படுமா?

ஜனநாயகன் : அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்படுமா?

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. தணிக்கை சான்றிதழ் தாமதம், இணையங்களில் திருட்டுத்தனமாக வெளியானது, ஏ சான்றிதழ் என பல காரணங்களால் இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன.

படத்தின் முதல் நாள் வசூலாக சுமார் 80 கோடி வசூலாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், பாக்ஸ் ஆபீஸ் வசூலை வெளியிடும் இணையதளங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ முதல் நாள் வசூலையோ, அல்லது இரண்டாம் நாள் வசூலையோ இதுவரை வெளியிடவில்லை.

விஜய் நடித்து கடைசியாக 2024 செப்டம்பர் 5ல் வெளியான 'தி கோட்' படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி என மறுநாளே செப்டம்பர் 6ம் தேதி அதன் தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டது.

அதற்கும் முன்பு 2023 அக்டோபர் 19ல் விஜய் நடித்து வெளியான 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி என மறுநாளே அக்டோபர் 20ம் தேதி அதன் தயாரிப்பு நிறுவனமும் போஸ்டரை வெளியிட்டிருந்தது.

'லியோ' படத்தின் முதல் நாள் வசூலை மட்டுமல்ல, ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கூலி' படத்தின் முதல் நாள் சாதனை வசூலான 151 கோடியையை முறியடித்து 'ஜனநாயகன்' புதிய முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தானே அது கணக்கில் வரும், சினிமா வரலாற்றில் பதியப்படும். அதற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !