பிளாஷ்பேக்: நடிகைகள் லலிதா, பத்மினியை நினைவில் வைத்து உருவாக்கப்பட்ட “காஞ்சனா”
திரிபுரசுந்தரி என்ற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளர் லட்சுமி அடிப்படையில் ஒரு மருத்துவர். இவர் 150க்கும் அதிகமான நாவல்களையும், ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும் எழுதி, வாசகர்களின் இதயம் தொட்டவர். இவரது பெரும்பாலான படைப்புகள் குடும்பப் பிரச்னைகள், குடும்ப உறவுகள், துணிச்சல்மிகு பெண்கள் என இவைகளைச் சுற்றிச் சுழல்வதாகவே இருக்கும். “தமிழ் வளர்ச்சிக் கழக விருது”, “சாகித்ய அகாடமி விருது” பெற்ற இவரது படைப்புகள் சில திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன. இவரது “பெண் மனம்” என்ற படைப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற “இருவர் உள்ளம்” என்ற திரைப்படம். அதேபோன்று இவரது “காஞ்சனையின் கனவு” என்ற படைப்புதான் “காஞ்சனா” என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
தொடர்கதையாக வெளிவந்து பரபரப்பாக படிக்கப்பட்டு வந்த இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க விரும்பினார் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீ ராமுலு நாயுடு. அதற்கான முயற்சி மேற்கொண்டு, எழுத்தாளர் லட்சுமியை சந்தித்து, கதையின் உரிமையையும் பெற்றார் ஸ்ரீ ராமுலு நாயுடு. அப்போது எழுத்தாளர் லட்சுமி ஸ்ரீ ராமுலு நாயுடுவிடம், 'மிஸ்டர் நாயுடு சார்' என் நாவலைப் படித்த வாசகர்கள், இந்தக் கதையில் நான் சித்தரித்துள்ள காஞ்சனா மற்றும் பாமா ஆகிய கதாபாத்திரங்களை, நடிகைகள் லலிதா மற்றும் பத்மினியை மனதில் வைத்துத்தான் எழுதினீர்களா? என்று என்னிடம் கேட்பார்கள். எனவே நீங்களும் அந்தக் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் இருவரையுமே நடிக்க வைக்கலாம் என்ற தனது விருப்பத்தை அவரிடம் சொல்ல, அதன்படியே அவ்விரு கதாபாத்திரங்களிலும் லலிதா மற்றும் பத்மினியை நடிக்க வைத்திருந்தார் ஸ்ரீ ராமுலு நாயுடு.
எழுத்தாளர் லட்சுமியின் “காஞ்சனையின் கனவு” என்ற தொடர்கதை “காஞ்சனா” என்ற பெயரில் திரைப்படமாக 1952ம் ஆண்டு வெளிவந்தது. எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து இயக்கியிருந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாபநாசம் சிவன் எழுதியிருந்ததோடு, முத்துச்சாமி தீட்சிதரின் இரண்டு கீர்த்தனைகளும் படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த கீர்த்தனைகளை பாடியிருந்தவர் பின்னணிப் பாடகி எம் எல் வசந்தகுமாரி. படத்திற்கு இசையமைத்திருந்தார் எஸ் எம் சுப்பையா நாயுடு. கே ஆர் ராமசாமி, லலிதா, பத்மினி, எம் என் நம்பியார், எம் ஆர் சந்தானலக்ஷ்மி, ஆரன்முல பொன்னம்மா, டி எஸ் துரைராஜ், ருஷ்யேந்திரமணி என திறமைமிகு கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.