ஹீரோவான இயக்குனர் இளன்; 'பியார் பிரேமா கல்யாணம்' நேரடி ஓடிடி ரிலீஸ்
ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினை வைத்து 'ஸ்டார்' படத்தை இயக்கினார். அது தோல்வியடைந்தது. இந்த நிலையில், 'பியார் பிரேமா கல்யாணம்' எனும் படத்தை தானே இயக்கி, நடிகராகவும் அறிமுகமாகிறார் இளன்.
இதில், 'குடும்பஸ்தன்' நாயகி சான்வி மேக்னா, சமூக வலைதள இன்ப்ளூயன்சர் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமான இதில், காதல், திருமணம், அதற்கு பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்கிறார்களாம்.
அதாவது, திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார் சான்வி மேக்னா. அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாசார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் போன்றவற்றை பேசும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்ற மெசேஜ் உடன் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆகஸ்ட் 21ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.