'ஜனநாயகன்' வந்தும் ஜனங்கள் வராத ஜூலை 2026
2026ம் ஆண்டின் ஜூலை மாதம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. நேற்றுடன் கடந்த ஏழு மாதங்களில் சுமார் 130 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2025ம் வருடத்தில் இதே ஜூலை மாத முடிவில் சுமார் 150 படங்கள் வரை வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் 20 படங்கள் குறைவாக உள்ளது.
இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் மொத்தமாக 14 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. முதல் வாரமான ஜூலை 3ல் 4 படங்களும், இரண்டாவது வாரமான ஜூலை 10ல் 5 படங்களும், மூன்றாவது வாரமான ஜூலை 17ல் 3 படங்களும், கடைசி இரண்டு வாரங்களில் தலா ஒரு படம் மட்டுமே வெளியாகி உள்ளன.
குஸ்தியில் கிடைத்த வெற்றி
வெளியான 14 படங்களில் இதுவரையில் ஒரே ஒரு படம் மட்டுமே லாபகரமான படமாக அமைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அந்தப் படம் 'கட்டா குஸ்தி 2'. ஜூலை 3ம் தேதி வெளியான இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படம் 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அன்றைய தினத்தில் வெளிவந்த மற்ற படங்களான “டார்க், இரு முனை, புத்தம் புது நேசம்” ஆகிய படங்கள் வந்ததும் போனதும் தெரியாமல் அமைந்தது.
வெற்றிக்காக ஏங்கும் இதயம்
ஜூலை 10ம் தேதி, “இதயம் முரளி, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, லவ் ஓ லவ், முதற்கனல்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'இதயம் முரளி' படம் மட்டுமே கொஞ்சம் தாக்குப் பிடித்து ஓடியது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதன் வசூல் குறைவுதான். தனது வெற்றிக்காக அதர்வா மீண்டும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டது.
ஒரு லவ் ஏமாற்றம்... மற்ற இரண்டும் வசூலில் தள்ளாட்டம்
அன்றைய தினம் வெளிவந்த மற்ற படங்களில் தனுஷ் அக்கா மகன் பவிஷ் தனி நாயகனாக நடித்து வெளிவந்த 'லவ் ஓ லவ்', எதிர்பார்த்து ஏமாற வைத்தது. மற்ற படங்கள் இந்த வருடப் பட்டியலில் இணைந்த படங்கள்.
ஜூலை 17ம் தேதி, “அன்பே டயானா, அருள்வான், நாடடோடி கூட்டம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'அன்பே டயானா' மட்டும் ஓரளவு வசூலித்துள்ளது. படத்திற்கான வெற்றியைக் கொண்டாடி நன்றி தெரிவிக்கும் விழாவையும் நடத்திவிட்டார்கள். சுமார் 4 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தியேட்டர் வசூல் எப்படி இருந்தாலும் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலம் போட்ட முதலீட்டை எப்படியும் எடுத்திருக்கலாம் என்பதே கோலிவுட் தகவல்.
அன்றைய தினம் வெளியான 'அருள்வான்' படம் ஒரு சிறுமியின் கல்வி ஆர்வம் பற்றிய நல்ல கருத்தைச் சொன்ன படமாக இருந்தாலும் விமர்சனம் மூலம் பெற்ற வரவேற்பை வசூலில் பெறவில்லை.
தப்பிக்குமா ஜனநாயகன்
ஜூலை 23ம் தேதி தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் வெளிவந்தது. ஜனவரியில் வர வேண்டிய படம், தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக தாமதமாக வந்தது. இடையில் திருட்டுத்தனமாக வேறு படம் இணையங்களில் லீக் ஆனது. இத்தனை சிக்கல்களுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளிவந்து 250 கோடி வசூலைக் கடந்துள்ளது. எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த 'தி கோட்' படத்தின வசூலான 400 கோடியை இந்தப் படம் கடக்குமா என்பதும் சந்தேகம் என்றே சொல்கிறார்கள்.
நேற்று ஜூலை 31ம் தேதி 'சட்டங்கள் ஆயிரம்' என்ற ஒரே ஒரு படம்தான் வெளிவந்தது. இந்த வருடப் படங்களின் எண்ணிக்கையில் இது மேலும் ஒரு படம்.
2026ம் வருடத்தின் முதல் அரையாண்டு பெரிய பரபரப்பாகவோ, வெற்றிகரமாகவே இல்லை. அடுத்த அரையாண்டில் சில முக்கிய பெரிய படங்கள் வருவதால் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த அரையாண்டின் முதல் மாதமே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
வரிசை கட்டும் ஆகஸ்ட் படங்கள்
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் வரையில் சில முக்கிய படங்களின் அறிவிப்புகள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது.
ஆகஸ்ட் 7ல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கதாநாயகனாக முதன் முதலில் நடிக்கும் 'டிசி,' அதே நாளில் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றுப் படம் 'ஜிடிஎன்' வருகிறது.
ஆகஸ்ட் 14ல் மும்முனைப் போட்டியாக, கவின், நயன்தாரா நடிக்கும் 'ஹாய்', விஷால் நடிக்கும் 'மகுடம்', சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகியவை வர உள்ளன.
செப்டம்பர் மாதத்தில், 'இம்மார்டல், மண்டாடி, சர்தார் 2, டிமாண்டி காலனி 3, மீசைய முறுக்கு 2, லெனின் பாண்டியன்,' அக்டோபர் மாதத்தில் 'மிஸ்டர் பாரத், ஏழு கடல் ஏழு மலை, ஜெயிலர் 2, ஓம்” ஆகிய படங்கள் வருகின்றன.
அதனால், வர உள்ள மாதங்கள் நம்பிக்கையாகவே தெரிகின்றன.
ஜூலை 2026ல் வெளியான படங்கள்…
ஜூலை 3
டார்க், கட்டா குஸ்தி 2, இரு முனை, புத்தம் புது நேசம்
ஜூலை 10
அரூபி, இதயம் முரளி, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, லவ் ஓ லவ், முதற்கனல்
ஜூலை 17
அன்பே டயானா, அருள்வான், நாடோடி கூட்டம்
ஜூலை 23
ஜனநாயகன்
ஜூலை 31
சட்டங்கள் ஆயிரம்