உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாரிசுகளின் பிடியில் கோடம்பாக்கம்...!

வாரிசுகளின் பிடியில் கோடம்பாக்கம்...!

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'லவ் ஓ லவ்' படங்களோட ஹீரோ பவிஷ் நாராயண் யாரு பாஸ்?
'டைரக்டர் கஸ்தூரி ராஜாவோட பேரன்.. செல்வராகவனுக்கும், தனுஷுக்கும் மருமகன் முறை.'
'அவரு நடிச்ச ரெண்டு படமும் ஓடவில்லை. இனி என்ன ஆகும்?'
'அடுத்து ரெண்டு படம் படப்பிடிப்புல இருக்கு. அவரை நீங்க ஹீரோவா ஏத்துக்குற வரைக்கும் படம் எடுப்பாங்க. ஏன்னா அவரு குடும்ப வாரிசு பாஸ்.'



இன்று கோடம்பாக்கத்தில் அறிமுகமாகிற அத்தனை ஹீரோக்களுக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கத்தான் செய்கிறது. எல்லாம் வாரிசு மயம். சினிமா என்றாலே என்னவென்று தெரியாத வளையல் கடை பாண்டியனை, தனது வசனகர்த்தா பாக்கியராஜை ' நீதான்யா என் அடுத்த பட ஹீரோ ' என்று பாரதிராஜா அறிமுகப்படுத்தியது போல் பல ஹீரோக்கள் அறிமுகமான காலம் இனி அது ஒரு கனாக்காலம் தான். இனி நீங்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக வேன்டுமானால் நிச்சயம் பெரிய இடத்து பிள்ளையாக இருக்க வேண்டும்.

இன்று நேற்று துவங்கவில்லை
சினிமாவில் தங்கள் பொற்காலம் முடிந்த பிறகு பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய இருவருமே கூட இந்த தவறுகளுக்கு தப்பவில்லை. எத்தனையோ களிமண்ணுகளை சிற்பமாக மாற்றிய பாரதிராஜா தனது வாரிசு மனோஜை திரையுலகில் நிலை நிறுத்த முடியவில்லை. இந்திய அளவில் பெயர் பெற்ற திரைக்கதை மன்னன் பாக்யராஜ் தனது வாரிசு சாந்தனுவை தேடி வந்த, 'காதல்', 'சுப்ரமணியபுரம்' போன்ற பல நல்ல கதைகளை கோட்டை விட்டார்.



சிவாஜி காலம் தொடங்கி ரஜினி, கமல், சிவகுமார், சத்யராஜ், டி.ராஜேந்தர்கள் காலத்திலேயே இந்த வாரிசுகள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள் என்றாலும் புதுமுகங்களுக்கான பூங்கதவுகளும் கொஞ்சம் திறந்தே கிடந்தன. இரண்டு வாரிசுகள் இறக்கப்பட்ட வேளையில் நான்கு புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சமீபகாலமாக, கோடம்பாக்கம் முழுக்கவே வாரிசுகளின் பிடியில் சிக்கிவிட்டதோ என்று சந்தேகிக்கும் நிலை உருவாகியுள்ளது என்பதுதான் நிஜ நிலவரம்.

எந்தப் பின்னணியும் இல்லாதவர்கள் ஒரு தோல்விப்படம் கொடுத்தாலே இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போகிற நிலையில் வாரிசுகள் மட்டும் எத்தனை தோல்விகள் கொடுத்தாலும் மறுபடியும் மறுபடியும் மார்க்கெட் செய்யப்படுகிறார்கள்.

விக்ரம் வாரிசு



விக்ரம் வாரிசு துருவ் பாலாவின் இயக்கத்தில் அறிமுகமான 'வர்மா' படம் ரிலீஸே ஆகவில்லை. அடுத்து எடுக்கப்பட்ட அதே படம் 'ஆதித்யா வர்மா' தோல்விப்படம். மூன்றாவது படமான 'மஹான்' மற்றொரு தோல்விப்படம். ஆனாலும் மார்க்கெட்டில் தொடர்ந்து தாக்குப்பிடிக்கப்பட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க வைக்கப்பட்டு பைசன் காளமாடனில் தான் வெற்றி பெறுகிறார். இனி தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்க முடியாத ஹீரோ. வேறொருவருக்கு இத்தனை வாய்ப்புகள் கனவிலும் கிடைக்காது.

சூர்யா சேதுபதி



இதேபோல் விஜய் சேதுபதியின் மகர் சூர்யா சேதுபதி 'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படி ஒரு படம் வந்ததா என்று கேள்வி எழுப்புகிற அளவுக்கான ஒரு தோல்வி. ஆனாலும் அடுத்து ஒரு படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்க, அப்பா தொடர்ந்து கதைகள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். தமிழ் சமூகம் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாஸும், லிங்குசாமியும் தங்கள் உறவுக்காரப் பிள்ளைகளை இறக்கியிருக்கிறார்கள். லிங்குசாமியின் அடுத்த பட ஹீரோ இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் என்றொரு நம்பமகமான தகவலும் நடமாடுகிறது.

அர்ஜித் ஷங்கர்



இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரைத் தொடர்ந்து தற்போது அவரது மகன் அர்ஜித் ஷங்கரும் கதாநாயகனாகக் களம் இறங்கிவிட்டார். அவர் ஷங்கர் மகன் என்கிற ஒரே காரணத்துக்காகவே அடுத்தும் சிலர் கதைகளுடன் காத்திருக்கிறார்கள்.

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா போலவே நடன இயக்குனர் லாரன்ஸின் தம்பி எல்வினும் பல குட்டிக்கரணங்கள் அடித்து வருகிறார்.

கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்கும், 'இதயம் முரளியின்' அதர்வாவும் இன்னும் சரியான கரை தெரியாமல் நீந்திக் கொண்டே இருக்கிறார்கள்.

மாஸ்டர் பிரபுதேவா கடற்கரை மணலில் 'பேட்டை ராப்' பாடலுக்கு நடனப் பயிற்சிகள் கொடுத்து தனது மகனை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குஷ்பு, உதயநிதி வாரிசு
இன்னும் இன்னும் நீளும் இந்த பெரிய லிஸ்டில் குஷ்பு மகள்கள், முன்னாள் துணை முதல்வர் மகன் இன்பநிதி, இந்நாள் முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோரும் இருக்கிறார்கள்.



குஷ்பு மகள் அவந்திகா நடிக்கும் 'அட்டாக்கர்' படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடந்து கொண்டிருக்க, குதிரைப் பயிற்சி, நடனப் பயிற்சி, சண்டைப் பயிற்சி என பல பயிற்சிகள் முடித்து மாரி செல்வராஜுக்காக காத்திருக்கிறார் இன்பநிதி.

ஹாட் டாப்பிக் ஜேசன் சஞ்சய்



இந்த வாரிசுகள் விவகாரத்தில் சமீபத்திய ஹாட் டாபிக் ஜேசன் சஞ்சய்தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அவரது அறிமுகப்படமான 'சிக்மா' மிக விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், சொகுசாக நடிகராக களம் இறங்காமல் தனது திறமையை மட்டுமே நம்பி டைரக்டரா ஸ்டெப் வைக்கிறாரே அதுவே தனி கெத்துதான் என்று ஒரு தரப்பும், இப்படி ஒரு பிரபலமான அப்பா இல்லைன்னா இவ்வளவு ஈஸியா எப்படி டைரக்ஷன் சான்ஸ் கிடைச்சிருக்கும் இன்னொரு குரூப்பும் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

போகட்டும். அவர்களுக்கும் பொழுதுபோக வேண்டுமல்லவா?

நாம் தமிழ் சினிமா வாரிசுகள் விவகாரத்துக்கு வருவோம். இப்படி திரும்பின திசையெல்லாம் வாரிசுகளா என்கிற கொந்தளிப்பான மனநிலைக்கு வந்திருக்கும் உங்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி.

கலைக் குடும்பம்



நமது பக்கத்து ஆந்திர மாநில மெகா ஸ்டார் சிரஞ்சீவியை அறிந்திருப்பீர்கள். அவர் வீட்டில் மட்டும் தம்பிகள், மகன், மச்சான் ரத்த உறவுகள் கொண்ட, பவன் கல்யாண், ராம் சரண்,அல்லு சிரிஷ், வருண் தேஜ் உள்ளிட்ட எட்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். அதுபோக கேரக்டர் ரோல்களில் நடிக்கும் மாமனார்கள், பெரியப்பாக்கள், ஒண்ணுவிட்ட சித்தப்பாக்கள், என்று இன்னும் ஒரு ஏழெட்டுப் பேரும் இருக்கிறார்கள். அதாவது சிரஞ்சீவியின் வீடே ஒரு நடிகர் சங்கம் என்று சொல்லுமளவுக்கு.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !