உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பட விழாக்களை தவிர்த்த நயன்தாரா, ‛டாக்சிக்' விழாவில் பங்கேற்ற காரணம் என்ன?

பட விழாக்களை தவிர்த்த நயன்தாரா, ‛டாக்சிக்' விழாவில் பங்கேற்ற காரணம் என்ன?


பொதுவாக, தான் நடிக்கும் பட விழாக்களில் நயன்தாரா கலந்து கொள்ளமாட்டார், தான் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டுவிழா, புரமோஷன்களுக்கு நயன்தாரா வரமாட்டார். தனது படம் குறித்து பேட்டி கொடுக்கமாட்டார். இதை பாலிசியாக வைத்து இருந்தார். ஆனால், சமீபத்தில் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‛எல்ஐகே' படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்த நயன்தாரா, அப்பட விழாவில் பங்கேற்றிருந்தார். தான் நடிக்கும் படங்களுக்கும் இதுபோல வந்திருந்தால், படத்தின் மார்க்கெட் இன்னும் கூடியிருக்கும், ஆனால் தான் தயாரித்த படங்களுக்கு மட்டும் அவர் லாபம் பார்க்க அந்த விழாவில் பங்கேற்பதாக நயன்தாரா மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த ‛டாக்சிக்' படத்தில் அவரது சகோதரியாக நடித்துள்ளார் நயன்தாரா. இப்பட டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆக.,8) நடைபெற்றது. இதில், நயன்தாராவும் பங்கேற்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பட விழாவை புறக்கணிக்கும் நயன்தாரா, அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பங்கேற்றது மீண்டும் கேள்வியை எழுப்பியது.

இதுப்பற்றி விழா மேடையில் நயன்தாரா பேசுகையில், ‛‛நான் விளம்பர நிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. அதில் நான் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை, அதனால் தான் தள்ளி நிற்கிறேன். ​ஆனால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது, பல காரணங்களால்… முக்கியமாக 'யஷ்'. டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் ஒரு போன் கால் செய்தார், நான் இதில் கலந்துகொள்வதற்கு அது மட்டுமே போதுமானதாக இருந்தது'' என்றார். யஷ்-ன் வேண்டுகோளுக்காக இந்த விழாவில் பங்கேற்றதாக சொல்லும் நயன்தாரா, அவர் நடித்த படங்களின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரியிருந்தும் முன்பு தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

விழாவில் மேலும் நயன்தாரா பேசியதாவது: ருக்மணி வசந்த், உங்களது பயணத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் நடிக்கும் அற்புதமான திரைப்படங்களைப் பார்க்கிறேன். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ​கியாரா அத்வானி, இது உங்களது திரைப்பயணத்திலேயே மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்னது போல, 'டாக்சிக்' படத்திற்கு முன் ஒரு கியாரா, 'டாக்சிக்' படத்திற்குப் பின் ஒரு கியாரா இருப்பார். டாக்சிக் உங்களது சிறந்த படமாக இருக்கும், மேலும் இப்படத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.

தாரா சுடாரியா, நீங்கள் இப்போது பேசும்போது கூட, அவர் உங்களை ஒரு டிஸ்னி இளவரசி என்று சொன்னபோது, நீங்கள் உண்மையிலேயே அப்படித் தான் தெரிந்தீர்கள். மிகவும் அழகான பொண்ணு, உங்களுக்கு எனது அன்புகள். ​படப்பிடிப்பு தளத்தில் எனக்கு ஒரு நல்ல தோழியாக கிடைத்தவர் ஹூமா குரேஷி. படப்பிடிப்பில் நானும் ஹூமாவும் தான் அதிகம் பேசிக்கொண்டோம்.

கீது மோகன்தாஸ்

நான் இதுபோல உரைகள் அதிகம் நிகழ்த்துவதில்லை, அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், மன்னித்துவிடுங்கள். நானும் இயக்குனர் கீதுவும் மிக நீண்ட, அழகான ஒரு பயணத்தைக் கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம், 20 வருடங்களுக்கு முன்பு இருக்கும். அது வேறு ஒரு கீது! ​அவர் என்னை இந்தப் படத்திற்காக அழைத்தபோது, பல நடிகர்கள் இருப்பதால் தயங்கினேன். வழக்கமாக அதிக நடிகர்கள் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் சற்று கவனமாக இருப்பேன். அவர் என்னிடம் 10 மில்லியன் கேள்விகள் கேட்டார். சரி, நீங்கள் வந்து கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டதும், ‛யார் இந்தப் பெண்? நாம் இதுவரை பார்த்திராத இந்த இயக்குனர் யார்?' என ஆச்சரியப்பட்டேன். நீங்கள் ஒரு நம்பமுடியாத விஷயத்தைப் பார்க்கப் போகிறீர்கள். டிரைலர் பார்த்திருப்பீர்கள் அது அற்புதமாக இருக்கிறது, ஆனால் படம்… உங்களை அசர வைத்துவிடும்!

யஷ்

​அடுத்ததாக… நான் முதன்முதலில் யஷ்ஷைச் சந்தித்தபோது பல விஷயங்கள் வியந்தேன்… என்னை நம்புங்கள், நான் பல சூப்பர் ஸ்டார்களுடன், பல நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அனைவரும் பெரியவர்கள், கூலானவர்கள், திறமையானவர்கள். ஆனால் யஷ்ஷை முதன்முதலில் சந்தித்தபோது, அவரிடம் இருக்கும் அந்தப் பிரமாண்டமான பிம்பம் நேரிலும் அப்படியே இருந்தது. ஓ சரி, நான் ராக்கி பாயின் ராஜ்யத்திற்குள் நுழைகிறேனா? என்பது போல் இருந்தது! டிரைலரில் பார்ப்பது போலவே தான் உண்மையிலும் இருக்கிறார். ​ஆனால் அதையும் தாண்டி, அவரது உழைப்பைப் பற்றி அனைவரும் பேசினார்கள். இவரை விடக் கடினமாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை! படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அவர் உழைக்கும் விதத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்த மனிதர் தனது வாழ்க்கையின் 4, 4.5 ஆண்டுகளை இப்படத்திற்காகக் கொடுத்திருக்கிறார்.

​அவர் தனது வாழ்க்கையை, குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை, குழந்தைகளுக்கான நேரத்தை, தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதனாக அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் தியாகம் செய்துள்ளார். அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஸ்கிரிப்ட் எவ்வாறு நகர்கிறது, படப்பிடிப்பு எப்படிப் போகிறது, ஒவ்வொரு நடிகரும் சவுகரியமாக இருக்கிறார்களா, தங்களது சிறந்த நடிப்பைக் கொடுக்கிறார்களா என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.

​மேலும், இயக்குனர் கீதுவை அவர் பார்த்துக்கொண்ட விதம்… ஒரு நடிகர் தனது இயக்குனரை இப்படிப் பார்த்துக்கொண்டதை நான் பார்த்ததே இல்லை. நீங்கள் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பது தெரியும், ஆனால் ஒரு தயாரிப்பாளர் கூட இப்படிப் பார்த்துக் கொண்டதில்லை. ​உங்களின் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் உள்ளது யஷ்! ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, ஒரு மனிதராக, ஒரு கணவராக, குடும்பத் தலைவனாக, தந்தையாக உங்களை மிகவும் மதிக்கிறேன். நீங்கள் இன்று இருக்கும் இந்த இடத்திற்கு உங்களின் கடின உழைப்பு தான் காரணம். இவ்வாறு நயன்தாரா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !