'சேயோன்' படத்தில் நடிக்கப் போகும் சீமான்
'தாய்க் கிழவி' படத்தை அடுத்து சிவக்குமார் முருகேசன் இயக்கி வரும் படம் 'சேயோன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு மே மாதம் மதுரையில் ஆரம்பமாகி நடந்தது. அப்போது நடந்து முடிந்த முதற்கட்டப் படப்பிடிப்பை அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மீண்டும் மதுரையில் ஆரம்பமாகி உள்ளது. அங்கு தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்களாம்.
தற்போதைய தகவல்படி சீமான் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிகிறது. அவரும் தற்போது நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறாராம். இரண்டு வார காலத்திற்கு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகும் என்கிறார்கள்.
சீமான் இதற்கு முன்பு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தீவிர அரசியலில் இருந்தாலும் தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளில் கதையும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் அவர் நடிக்க சம்மதிக்கிறார் என்கிறார்கள். அதனால்தான் 'சேயோன்' பட வாய்ப்பையும் அவர் ஏற்றுள்ளாராம்.