அரசியலில் களமிறங்க நடிகர் தனுஷ் ஆர்வம்; உளவுத்துறை வாயிலாக கண்காணிக்கும் அரசு
அரசியலில் இறங்க ஆர்வம் காட்டும் நடிகர் தனுஷின் செயல்பாடுகளை கண்காணிக்க, உளவுத்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.
நடிகர் தனுஷ், கடந்த ஓராண்டாக அரசியலில் இறங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது. தற்போது, அவரது ரசிகர் மன்றத்தை, அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
முதல்கட்டமாக, ரசிகர் மன்ற கொடியை, தன் பிறந்த நாள் விழாவில் தனுஷ் வெளியிட்டார். அந்த விழாவில், மறைமுகமாக அரசியல் பேசினார்.
உறுப்பினர் சேர்க்கை
சட்டசபை தொகுதி வாரியாக மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கையை, தனுஷ் தொடங்கி உள்ளார். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில், உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய நிலையில், 234 தொகுதிகளிலும் இந்த ஆண்டுக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க, மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், அவரது செயல்பாடுகளை கண்காணிக்க, உளவுத்துறைக்கு த.வெ.க., அரசு உத்தர விட்டுள்ளது.
உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: இளம் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பது தனுஷ் தான். இளைஞர்களை குறி வைத்து, அவரின் அரசியல் செயல்பாடு உள்ளது.
முதல்வராக விஜய் வெற்றி பெறும் முன், அவரது ரசிகர் மன்றம் செய்த பணிகளை போலவே, நலத்திட்ட உதவிகள், மாணவர்களின் கல்வி செலவை ஏற்பது, ரத்த தானம், அன்னதானம் என, தனுசும் பின்பற்றுகிறார்.
வலைதள செயல்பாடு
மாவட்டவாரியாக இருந்த ரசிகர் மன்றங்களை, தொகுதிவாரியாக விரிவுபடுத்தி, உறுப்பினர் சேர்க்கை நடத்தி, தனது பலத்தை எடை போட தனுஷ் திட்டமிட்டுள்ளார். அவரின் செயல்பாடு, வரும் காலத்தில் த.வெ.க.,வுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தனுஷின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உளவுத்துறையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்ற செயல்பாடுகளை கண்காணித்து, அறிக்கை அளிக்கும்.
மேலும், விஜயின் தனி செயலர் ஜெகதீஷ் மேற்பார்வையில், தனுஷ் அமைப்பின் சமூக வலைதள செயல்பாடுகளும் கண்காணிக்கப் படுகின்றன. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.