சான்றிதழ் கொடுத்த பிறகு எந்த மாற்றமும் செய்ய முடியாது: தணிக்கை வாரியத்தின் புதிய விதி
பொதுவாக திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டால் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று கண்காணிக்க தணிக்கை குழுவிற்கு உரிமை உண்டு. அதுகுறித்த புகார் வந்தால் தணிக்கை சான்றிதழழை திரும்ப பெறும் உரிமையும் உண்டு. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் உரிய காரணத்துடன் விண்ணப்பித்து மாற்றம் செய்யலாம் என்று தணிக்கையின் 33ம் விதி அனுமதி அளித்தது.
ஆனால் இந்த விதி தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு முறை சான்றிதழ் வழங்கி விட்டால் பின்னர் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல், ஒரு திரைப்படம் வாரியத்துக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுவிட்டால், அதன் பிறகு அந்தப் பதிப்பில் எந்த மாற்றத்தையும் தயாரிப்பாளர்கள் செய்ய முடியாது. இந்த அறிவிப்பால், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல படங்களின் கிளைமாக்ஸ் மக்களுக்கு பிடிக்காமல் போனால் அதனை மாற்றி வேறு கிளைமாக்சை இணைத்து 33ம் விதியை பயன்படுத்தி மாற்றி உள்ளனர். சில முக்கியமான நடிகர்கள், நடிகைகளின் காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டால் இந்த விதியை பயன்படுத்தி நீக்கிய நிகழ்வுகளும் உண்டு. இனி அதற்கு சாத்தியமில்லை என்பதால் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.