பிரபாஸின் ‛பௌசி': சுதந்திர தினத்தில் வெளியான அதிரடி போஸ்டர்!
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் வரலாற்றுப்படம் ‛பௌசி'. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இப்படத்தின் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மையப்படுத்திய காட்சி இடம்பெற்றுள்ளது.
வழக்கமான கொண்டாட்டக் காட்சிக்கு பதிலாக, படத்தின் வரலாற்றுப் பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு காட்சியை படக்குழுவினர் போஸ்டராக வெளியிட்டுள்ளனர். வானமெங்கும் புகை மண்டலம், பின்னணியில் எரியும் தீப்பிளம்புகள் மற்றும் தெருக்களில் சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் என வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு நகரத்தை அந்த போஸ்டர் காட்டுகிறது. படத்தின் காலகட்டத்தை உணர்த்தும் வகையில் தூரத்தில் சார்மினார் கோபுரமும் காட்சி அளிக்கிறது.
இந்த போஸ்டரில், பிரபாஸ் பின்புறமாக நின்று கொண்டிருப்பது போலக் காட்டப்பட்டுள்ளார்; அவரது முகம் மறைக்கப்பட்டுள்ளது. மேலும், சுதந்திரம் ஒரு கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது என்ற வாசகமும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. ‛பௌசி' படத்தில் பிரபாஸூடன் இமான்வி , அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்ரதா மற்றும் பானு சந்தர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.