உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 மாதங்கள் வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிட்ட 'ஹனுமான் அன்ஸ்' பட இயக்குனர்

5 மாதங்கள் வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிட்ட 'ஹனுமான் அன்ஸ்' பட இயக்குனர்


கடந்த ஆகஸ்ட் துவக்கத்தில் ஹிந்தியில் வெளியான 'ஹனுமான் அன்ஸ்' என்கிற பக்திப் படம், ஆரம்பத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், பின்னர் மவுத் டாக் மூலமாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தற்போது 100 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. நீம் கரோலி பாபாவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் விஷால் சதுர்வேதி இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் படக்குழுவினர் இருந்தாலும், படத்தின் இயக்குனரான விஷால் சதுர்வேதி இப்படத்திற்காக பல தியாகங்களை செய்துள்ளார். படப்பிடிப்பில் பல விஷயங்களைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளார்,

அதாவது, படப்பிடிப்புத் தளம் முழுவதும் சைவ உணவு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. படக்குழுவினர் அனைவரும் தினமும் தவறாமல் 'ஹனுமான் சாலிசா' பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இயக்குனர் விஷால் சதுர்வேதி முழுக்க முழுக்க பழங்களை மட்டுமே உட்கொண்டு தனது விரதத்தைக் கடைப்பிடித்துள்ளார்.

இப்படத்தின் மீதுள்ள அதீத பக்தி காரணமாக, தனது இயக்குனருக்கான சம்பளத்தையும் அவர் முழுமையாக விட்டுக் கொடுத்துவிட்டாராம். ஆரம்பத்தில் ஓடிடி தளங்களில் இந்தக் கதையைக் கூறியபோது சில எதிர்மறையான பதில்களையும் அவமதிப்புகளையும் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், இப்போது இப்படத்தை வாங்குவதற்கு ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !