உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: போலீசின் குடும்ப பிரச்னையை பேசிய படம்

பிளாஷ்பேக்: போலீசின் குடும்ப பிரச்னையை பேசிய படம்


போலீசின் சாதனை, துப்பறியும் திறமை என அவர்களின் பணி நிமித்தமான படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டெபிளின் குடும்ப பிரச்னை பற்றி பேசிய படம் 'போலீஸ்காரன் மகள்'. இதே தலைப்பில் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பி.எஸ்.ராமய்யா நாடகத்தை எழுதியிருந்தார். அதன் உரிமத்தை வாங்கி ஸ்ரீதர் அதனை படமாக இயக்கினார்.

ஒரு நேர்மையான காவலருக்கு (சகஸ்ரநாமம்) ஒரு மகனும் (ஆர். முத்துராமன்) ஒரு மகளும் (சி. ஆர். விஜயகுமாரி) உள்ளனர். வசதியான ஒருவரின் மகனான பாலாஜி, முத்துராமனின் நண்பராக இருந்து அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்து செல்கிறார். பாலாஜி விஜயகுமாரியைக் காதலிக்கிறார். அவளும் அரைக் காதலிக்கிறார். தன் தந்தை மற்றும் சகோதரருக்குத் தெரியாமல் பாலாஜியை ரகசியமாகச் சந்திக்கிறாள்.

இதற்கிடையில், பாலாஜியின் தந்தை தன் மகனுக்குத் தனது உறவு பெண் ஒருவருடன் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார். ஆரம்பத்தில் இத்திட்டத்தை மறுக்கும் பாலாஜி, தந்தையின் விருப்பப்படி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தனது சொத்துரிமையை இழக்க நேரிடும் என்பதை அறிந்ததும் அதற்குச் சம்மதிக்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் விஜயகுமாரி, இறுதியில் பாலாஜியுடனான தனது காதலைப் பற்றித் தன் பெற்றோரிடம் வெளிப்படுத்துகிறாள்.

அதன் பிறகு ஒரு பெரும் பணக்காரரை எதிர்த்து போலீஸ் கான்ஸ்டபிள் சகஸ்ரநாமமும், அவரது மகன் முத்துராமனும் நடத்தும் உணர்வுபூர்வமான போராட்டம்தான் படத்தின் கதை. சாந்தகுமாரி, புஷ்பலதா, மனோரமா, சகுந்தலா, நாகேஷ், சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்', 'இந்த மன்றத்தில் ஓடிவரும்', 'பொறந்தாலும் ஆம்பளையா பொறக்ககூடாது', 'கண்ணிலே நீர்' போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றது. படத்தின் வெற்றிக்கு பிறகு 'கான்ஸ்டபிள் கூத்தரு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'வியாமோகம்' என்ற பெயரில் மலையாளத்திலும் ரீமேக் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !