சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினி இரங்கல்
தமிழ் பேராசிரியரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், ‛சிவாஜி' உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவருமான சாலமன் பாப்பையா, 90, உடல்நலக்குறைவால் மதுரையில் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய்
லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்
ஷங்கர் இயக்கத்தில் தன்னுடன் ‛சிவாஜி' படத்தில் நடித்த சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன்
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டி.ராஜேந்தர்
முன்னாள் பேராசிரியரும், பட்டிமன்றம் நடுவரும் ஆகிய சாலமன் பாப்பையா மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. தமிழ் தூண் ஒன்று சாய்ந்து விட்டது. கன்னித்தமிழ் பூங்காற்று ஓய்ந்து விட்டது. பட்டிமன்ற சோலை ஒன்று காய்ந்து விட்டது. கண்கள் கண்ணீர் மழையை வடிக்கின்றது. அது இரங்கற்பா படிக்கின்றது. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் நெஞ்சங்களுக்கும், தமிழ் நல்லுலகத்திற்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
நடிகர் ராமராஜன்
தமிழ் இலக்கிய பேச்சை தரணியெங்கும் கொண்டு சேர்த்த மூத்த தமிழறிஞர், பரணி போற்றும் பேச்சாற்றல் கொண்ட பல்சுவை வித்தகரான பத்ம ஸ்ரீ ஐயா சாலமன் பாப்பையாவின் மறைவு ஆறுதல் அடைய முடியாதது, அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.