உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தவாரம் 11 படங்கள் ரிலீஸ் : இந்தாண்டில் இது தான் அதிகம்

இந்தவாரம் 11 படங்கள் ரிலீஸ் : இந்தாண்டில் இது தான் அதிகம்

2026ம் ஆண்டில் இதுவரையில் கடந்து போன இத்தனை வாரங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துள்ளது. அதில் ஓரிரு வாரங்களில் மட்டுமே அதிக பட்சமாக 9 படங்கள் வரை வெளியாகி உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் மற்றும் ஜூன் இரண்டாம் வாரத்தில் நிறைய படங்கள் வெளியாகின.

இந்த வாரம் செப்டம்பர் 17, 18ல் வெளியாகப் போகும் படங்களின் எண்ணிக்கை 11. இத்தனை மாதங்களில் ஒரே வாரத்தில் இவ்வளவு படங்கள் வெளியானதில்லை. இந்தாண்டில் இதுதான் அதிகம்.

“பீப், டார்க் ஹெவன், E 1, என்ன விலை, கோல்டு கால், நல்ல படம், பாரீஸ் கபே, ரவாளி, லட்சியவாதி, வள்ளிமலை வேலன், சண்டக்காரி” ஆகிய 11 படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'என்ன விலை', குரு சோமசுந்தரம் நடித்த 'பாரீஸ் கபே', விமல்-ஸ்ரேயா நடித்த ‛சண்டக்காரி' ஆகிய படங்கள் மட்டும்தான் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள். மற்ற படங்கள் அறிமுக நடிகர்கள், வளரும் நடிகர்கள் நடித்துள்ள சிறிய பட்ஜெட் படங்கள். ‛என்ன விலை' படம் மட்டும் செப்., 17ல் ரிலீஸாகின்றன. மற்ற படங்கள் செப்., 18ல் ரிலீஸாகின்றன.

கடந்த வாரம் வெளியான படங்களில் 'மண்டாடி' படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேறு படங்கள் எதுவும் இல்லாதததால் இந்த வாரம் வெளியாக உள்ள இத்தனை படங்களும் எப்படியாவது குறைந்த அளவிலாவது தியேட்டர்களைப் பெற்றுவிடுவார்கள்.

முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கே படம் சரியில்லை என்றால் ஒரே நாளில் முடிவு கட்டிவிடும் ரசிகர்கள் இத்தனை படங்களில் எந்தப் படங்களைத் தேர்வு செய்து வந்து பார்ப்பார்கள் என்பது புரியாத புதிர் தான். இந்த வாரப் படங்களுடன் 2026ம் ஆண்டின் படங்களின் எண்ணிக்கை 160ஐக் கடந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !