'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் குஷ்பு இருக்கிறாரா?
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட இன்று வெளியாகி உள்ளது. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியிலும் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய மொழிகளில் நவம்பர் 6ம் தேதியும், இந்தியில் இன்னும் சில வாரங்கள் கழித்து வர உள்ளது.
இந்தியில் தீபாவளிக்கு ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடித்த 'ராமாயணா' வருவதால் இந்த தாமதம் என தகவல். இந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி, ஞாயிற்று கிழமை தீபாவளி வருகிறது. அதனால், நவம்பர் 6ம் தேதி முன்னதாக வெள்ளிக்கிழமை 'மூக்குத்தி அம்மன் 2' ரிலீஸ் ஆகிறது. இதில் நயன்தாரா அம்மனாகவும், ரெஜினா வில்லியாகவும் நடிக்கிறார். டீசரை பார்க்கும்போது வரலாற்று கதை, இப்போதைய கதை என இரண்டுயும் கலந்து சுந்தர்.சி எடுத்து இருப்பதாக தெரிகிறது. ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதுவரை தமிழில் வந்த அம்மன் படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவானது. கிராபிக்ஸ் வேலைகளுக்கு மட்டுமே பல கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்த ஹீரோயின் படங்களில் இதுதான் அதிக பட்ஜெட் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா தவிர இந்த படத்தில் சினேகாவும் இருக்கிறார். இனியா, அபிநயா, மைனா நந்தினியும் நடிக்கிறார்கள். துனியா விஜய், யோகிபாபு போன்றவர்களுடன் சுந்தர்.சியும் நடித்து இருப்பதாக தகவல்.
பொதுவாக சுந்தர்.சி பெரிய பட்ஜெட் படத்தில், அரண்மனை படங்களில் ஒரு பாடலுக்கு குஷ்பு ஆடுவது வழக்கம். இந்த படத்தில் குஷ்பு பாடல் காட்சி இருக்கிறதா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. வேல்ஸ் நிறுவனம் தவிர, இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் குஷ்பு இருக்கிறார். நயன்தாராவின் ரவுடிபிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கு மேல் என்கின்றனர்.