'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் பஞ்சாயத்து ஓவர்
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்து 2022ல் வெளியான 'டான்' படம் 100 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து வெற்றி பெற்றது.
அந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக சொல்லப்பட்ட, அறிவிக்கப்பட்ட படங்கள் எதுவும் ஆரம்பமாகவில்லை. லைகா நிறுவனம் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க சிபி சக்கரவர்த்தி இயக்குவதற்கான படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்தன. அவர் சொன்ன கதைகள் எதுவும் பிடிக்காததால் ரஜினி நடிக்க மறுத்ததாகச் சொன்னார்கள்.
அதற்கடுத்து தெலுங்கில் நானி நடிக்க, சிபி இயக்கும் படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகின. அந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அதன்பின் என்ன நடந்ததோ இப்படமும் கைவிடப்பட்டது.
அதற்கடுத்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிக்க சிபி சக்கரவர்த்தி இயக்க படத்தின் வேலைகள் ஆரம்பமாகி அதுவும் நடக்கவில்லை. பின்னர், கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்க அவரது 173வது படமாக சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள படத்தின் அறிவிப்பும் வெளியானது. சுந்தர் சி விலகியதற்குப் பதிலாக சிபி சக்கரவர்த்தி ஒப்பந்தமானார். பின்னர் அவரும் மாற்றப்பட்டு அந்தப் படம் தான் தற்போது 'தர்மன்' படமாக அஷ்வத் மாரிமுத்து இயக்க படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனிடையே, சிபி இயக்க, நானி நடிப்பதாக இருந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்து தற்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளது.
இயக்குனருக்கு வழங்கப்பட்ட அட்வான்ஸ் தொகை, படத்திற்கான அலுவலகம் போட்டது, கதை விவாதம் நடந்து உள்ளிட்ட செலவுத் தொகைகள் அந்த முடிவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.