வாசகர்கள் கருத்துகள் (1)
thaai kizhavi padaththaivida intha padamthaan sirappaaka irukkirathu.
தயாரிப்பு : சிம்ஹமூர்த்தி சினிமாஸ்
இயக்கம் : தேவி பிரசாத் ஷெட்டி
நடிப்பு : விஜய் ராகவேந்திரா, கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டே, உஷாபண்டாரி
இசை : நவ்நீத்ஷாம்
ஒளிப்பதிவு : ஹேமந்த் ஆச்சார்யா
வெளியான தேதி : பிப்ரவரி 20, 2026
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 3.25 / 5
கன்னடத்தில் இருந்து வந்த கேஜிஎப், காந்தாரா படங்கள் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றன. அதை தொடர்ந்து பல நல்ல கன்னட படங்கள் தமிழில் டப்பாகின்றன. அந்தவகையில் இந்த வாரம் வந்திருக்கும் கன்னட திரில்லர் டப்பிங் படம் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்.
உடுப்பி பகுதியில் உள்ள ஆனேகுட்டா போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரியாக இருக்கிறார் ஹீரோ விஜய் ராகவேந்திரா. மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிலரின் வழக்குகளை விசாரிக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியரை சந்தேகப்பட்டு அவரை கைது செய்ய முயற்சிக்கிறார். அவர் கொலையாளி இல்லை என்பது அவருக்கு தெரிகிறது. அடுத்தடுத்து அதேபாணியில் நடக்கும் அந்த கொலைகளை தீவிரமாக துப்பறிக்கிறார். கொலை செய்யப்பட்டவர்கள் 50 வயதை தொட்ட ஆண்கள், அவர்களுக்கு பெண் குழந்தை இருக்கிறது. கொலையாளி ஒரு வீணை பொம்மையை தடயமாக விட்டு செல்வதை கண்டுபிடிக்கிறார். முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் துணையுடன் அந்த கொலைகளை இன்னும் தீவிரமாக விசாரிக்க, கொலைக்கான காரணம், கொலையாளி பற்றி பிளாஷ்பேக் தெரிய வருகிறது. அந்த கொலையாளியை தேடி கண்டுபிடித்து கைது செய்தால் அங்கே டிவிஸ்ட், அடுத்தும் விசாரணை, கடைசியில் ஹீரோ அக்கா கணவரையே கொலையாளி அப்படி கொடூரமாக கொலை செய்ய முயற்சிக்க, என்ன நடந்தது. உண்மையான கொலையாளி யார்? கொலைக்கான அதிரடி கோபக்காரணம் என்ன என்பதை திரில்லர் படங்களுக்கே உரிய விறுவிறுப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி
கிட்டத்தட்ட ஒரு மலையாள திரில்லர் படம் பார்ப்பது போல இருக்கிறது. அந்த ஏரியா பேக்கிரவுண்ட், வீடுகள், உடுப்பி, மங்களூர் பின்னணி கேரளாவை நினைவுப்படுத்துகிறது. ஒரு சின்ன ஸ்டேஷனில் இருந்து கொண்டு அதிரடி கொலைகளை விசாரிக்க தொடங்குவதில் இருந்து கதை நகர்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் ராகவேந்திராவுக்கு அதிரடி ஆக் ஷன் சீன் இல்லை. பிரமாண்ட சேசிங், ஹீரோயிச சீன்கள் இல்லை. மிக இயல்பான நடிப்பில், ரொம்பவே அமைதியாக நடித்து இருக்கிறார். கொலைகளை அவர் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள், அவர்களை நெருக்கும் விதம் பரபரப்பு. கொலை, கொலையாளி பற்றி அவ்வப்போது புது தகவல் வருவதும், திருப்பங்களும் கதைக்கு பெரிய பலம். இவர்தான் கொலையாளி நினைக்கும்போது ஒரு புதுக்கதை வருகிறது. அது ரசிக்கவைக்கிறது. கதை சொல்லும் பாணியும் புதிதாக இருக்கிறது.
முகம் தெரிந்த நடிகர்கள் நடிக்காவிட்டாலும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர், சக போலீசார், பிளாஷ்பேக்கில் வரும் மனிதர்கள், அந்த இளம் பெண், கொலையாளி என சந்தேகப்படும் நபர், கொலையாளியின் நடவடிக்கை இதெல்லாம் பக்காவாக வந்துள்ளது. இப்படி பல காரணங்கள் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பெரும்பாலான நடிகர்கள் சினிமாத்தனம் இல்லாமல் நடித்து இருப்பது படத்தை இன்னும் நெருக்கமாக்குகிறது. குறிப்பாக, பிளாஷ்பேக் காட்சிகள் படத்துக்கு உயிர். அதில்தான் என்ன நடந்தது, கொலையாளி எப்படி மாறினார் என்பதை விவரிக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் இன்னும் பரபரப்பு
சின்ன டவுண், விசாரணை, திரில்லர் காட்சிகளை ரசித்து எடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த். படத்தின் கதைக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஒரு வீணை, கர்நாடக சங்கீத தொடர்பு இருக்கிறது. அதனால், பின்னணி இசையில் வீணை கலந்து ஒருவித புதுமையை கொடுத்து மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் நவ்நீத் ஷாம். படத்தின் வெற்றிக்கு அவரின் பின்னணி இசை பெரிய பங்கு வகிக்கிறது.
கதையில் ஹீரோ, காதல், காமெடி இதெல்லாம் இல்லை. ஒரேவிதமான திரில்லர் ஜானரில் நகர்கிறது. ஒரு மாறுப்பட்ட திரில்லர் படங்களை விரும்புகிறவர்கள் இந்த படம் பிடிக்கும். குறிப்பாக, கிளைமாக்ஸ், கொலையாளி பற்றிய விடை மனதில் நிற்கும். ஒரு ஆழமான உளவியல் பிரச்னை அல்லது உளவியல் கோபத்தை மிகச்சரியாக கதையில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். அதனால், பல சீன்கள் மனதை வெகுவாக பாதிக்கிறது. ஒரு வித பயம், பீலிங் கடைசியில் பரிதாபம் வருவது படத்தின் ஹைலைட்
வழக்கமான கமர்ஷியல் படம் அல்ல, மெதுவாக நகரும் விசாரணை, வித்தியாசமான எடிட்டிங், சில லாஜிக் ஓட்டடைகள் என மைனஸ் இருந்தாலும், கதை, நடிப்பு, திரைக்கதை நேர்த்தி, திருப்பம், கிளைமாக்ஸ். குறிப்பாக, கதையில் சொல்லப்படும் சகோதர பாசம் ஆகியவை செகண்ட் கேஸ் ஆப் சீதாராமை முக்கியமான படமாக மாற்றுகிறது. யாருப்பா, இந்த இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி என கேட்க வைக்கிறது.
செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் - திரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு செம விருந்து
thaai kizhavi padaththaivida intha padamthaan sirappaaka irukkirathu.