நீளிரா
தயாரிப்பு : ஸ்டோன்பெஞ்ச் ஸ்டூடியோ
இயக்கம் : சோமிதரன்
நடிப்பு : கபிலா வேணு, சித்து குமரேசன், நவீன் சந்திரா, சனந்த், நமச்சிவாயம்
ஒளிப்பதிவு : செல்வரத்னம்
இசை : சிவா பத்மயன், கே,
வெளியான தேதி : ஏப்ரல் 3, 2025
நேரம் : 1 மணிநேரம் 42 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
இலங்கையின் வடக்கு பகுதி கிராமத்தில் உள்ள ஒதுக்குபுற வீட்டில் ஒருநாள் இரவில் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான சம்பங்களின் தொகுப்பே இந்த கதை. மறுநாள் காலை நடக்க இருக்கும் சித்து குமரேசன் திருமணத்துக்காக அவரின் அம்மா, தாத்தா, உறவினர்கள் தயாராகி வருகின்றனர். அந்த சமயத்தில் நவீன் சந்திரா தலைமையிலான இந்திய அமைதிப்படையினர் ஒரு தாக்குதல் நடத்த செல்லும் வழியில் சூழ்நிலை காரணமாக அந்த வீட்டிற்குள் செல்கின்றனர். அதை தெரிந்து கொண்ட எதிர் தரப்பு துப்பாக்கியுடன் அந்த வீட்டை சுற்றி வளைக்க, இரண்டு தரப்புக்கும் சண்டை நடந்ததா? அந்த இரவில் வீட்டில் இருந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? மறுநாள் திருமணம் நடந்ததா என்பதை 1988 பின்னணியில் சொல்லும் கதை. நீளிரா என்றால் நீண்ட இரவு என அர்த்தம். இலங்கையை சேர்ந்த சோமிதரன் தனது வாழ்க்கையில் சந்தித்த சில உண்மை சம்பவங்களின் பின்னணியில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்
இலங்கை பின்னணியில் சில படங்கள் வந்திருந்தாலும், இந்த கோணத்தில் யாரும் கதை சொன்னது இல்லை. இயக்குனரின் சொந்த அனுபவம், பார்த்த, கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாக திரைக்கதை உருவாகி இருப்பதால் மற்ற படங்களின் மாறுபட்டு, உண்மை தன்மையுடன் உணர்ச்சிபூர்வமாக நகர்கிறது. மணப்பெண்ணாக வரும் சித்து குமரேசன் நடிப்பும், திருமணம் நடக்குமா என்ற அவரின் பயமும் படத்துக்கு பிளஸ். அவர் அம்மாவாக நடித்துள்ள கபிலாவேணு அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார். சோகமான முகம், அழுத்தமான பேச்சு, முக்கியமான சில இடங்களில் கோபம், தவிப்பு என கலக்கியிருக்கிறார். அவரின் அப்பாவாக வரும் முதியவர் நமச்சிவாயமும் தன்னை பற்றி பேசும் ஒரு நீண்ட டயலாக்கில் பின்னி எடுத்து இருக்கிறார். இவர்களை தவிர, வீட்டில் இருக்கும் ஒரு காதலர்கள், கர்ப்பிணி, குழந்தைகள், வயதானவர்கள் என எல்லாருமே தங்கள் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.
அமைதிப்படை குழுவின் கேப்டனாக வரும் நவீன் சந்திரா கேரக்டரும், அவரின் செயல்பாடுகளும், அவர் எடுக்கும் முடிவும்தான் படத்தின் முக்கியமான விஷயம். அவர் கேரக்டர்தான் படத்தை சமநிலைப்படுத்தி, ஒரு சிறந்த அனுபவமாக்கி தருகிறது. உணர்ச்சிவசப்பட்டு தனது டீமில் உள்ளவர்கள் தவறு செய்யும்போதும், சில விஷயங்கள் நடக்கும்போது அவர் எடுக்கும் முடிவுகள் சபாஷ். அவர் டீமில் கோபக்கார வீரராக வரும் ரோஹித் நடிப்பும் நச். எதிரணியில் இருக்கும் சனந்த் கிளைமாக்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஒரு மாறுபட்ட கேரக்டரில் வரும் ரூபாவும் ஒரு இடத்தில் கலக்கியிருக்கிறார். அவர் கேரக்டரும், அவர் நடிப்பும் உருக்கம். அதேபோல் திருமண கொண்டாட்டங்கள், கிண்டல், டெக் எடுத்து படம் போடுதல், அந்தகால சூழல் நடந்த வித்தியாசமான திருமண முறைகள், போர் பாதிப்புகள், எளிய மனிதர்களின் மனநிலை ஆகியவையும் படத்தின் பலம்.
ஒருவித பயம், படபடப்பில் கதை தொடங்கி, அப்படியே நகர்கிறது. இரண்டு தரப்பு விருப்பு, வெறுப்புகளை காண்பிக்காமல் ஒரு அமைதியான முடிவை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுவே மற்ற படங்களில் இருந்து நீளிராவை வேறுபடுத்தி இருக்கிறது. எந்த பிரச்னையும் இன்றி சென்சார் கிடைக்க வழி வகை செய்து இருக்கிறது. சிக்கலான, சற்றே நகர்ந்தால் பிரச்னைகளை ஏற்படுத்தும் இந்த கருவை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். எந்த தரப்பையும் குறை சொல்லவில்லை. ஆதரவாக யாருக்கும் கொடி பிடிக்கவில்லை. ஒரு குடும்பத்தின் மனநிலை, ஒரு குழுவின் பயணத்தை சொல்லியிருக்கிறார். இலங்கையில் இருப்பது போன்ற உணர்வை, நடு இரவில் தவிப்பது போன்ற உணர்வை செல்வரத்னம் கேமரா காண்பிக்கிறது. அந்த வீட்டிக்குள் நடக்கும் சம்பவங்களை அவ்வளவு துல்லியமாக காண்பித்து இருக்கிறார். இசையும், அந்த கல்யாண பாடலும் படத்துக்கு பிளஸ்.
அந்த காலத்தில் நடந்த விஷயங்கள், அதன் பின்னணி தெரியாதவர்களுக்கு இந்த கதை பல்வேறு கேள்விகளை எழுப்பலாம். சொல்ல வரும் கருத்தை புரியாமல் ஆக்கலாம். ஆனால், அரசியல் நிலவரம், களம் நிலவரம் அறிந்தவர்களுக்கு நீளிரா சொல்லும் சேதி புதிதாக இருக்கும். பண்பட்ட நடிகர்களின் நடிப்பும், கதை சொன்ன விதமும், கிளைமாக்சும் 'இது வழக்கமான படமல்ல, இலங்கை பின்னணியில் இப்படியொரு கதையா' என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் தாக்கம் மனதில் பல காலம் இருக்கும்.
நீளிரா - படத்தின் தலைப்பு மட்டுமல்ல, படமும் புதுமைதான்.