உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / தி ஒடிசி (ஹாலிவுட்)

தி ஒடிசி (ஹாலிவுட்)

தயாரிப்பு : யுனிவர்சல் பிக்சர்ஸ்
இயக்கம் : கிறிஸ்டோபர் நோலன்
நடிகர்கள் : மேட் டேமன், டாம் ஹாலண்ட், அன்னா ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், ஜெண்டாயா மற்றும் பலர்
ஒளிப்பதிவு : ஹோய்ட் வான் ஹோய்டெமா
இசை : லுட்விக் கோரான்சன்
வெளியான தேதி : ஜூலை 17, 2026
நேரம் : 2 மணிநேரம் 52 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

உலகப்புகழ் பெற்ற கிரேக்க காவியமான ஒடிசியை கொஞ்சம் சினிமாத்தனம் கலந்து கிறிஸ்டோபர் நோலன் எடுத்த ஹாலிவுட் படம் தி ஒடிஸி. தமிழிலும் டப்பாகி வந்துள்ளது.

டிராய் அரசு மீது போர் தொடுக்கிறது ஸ்பார்ட்டா அரசு. குறுநில மன்னனான இத்தாக்கா அரசன் ஒடிசியஸ் ஸ்பார்ட்டாவுக்கு தனது படையுடன் உதவுகிறான். ஒரு மரக்குதிரையில் தனது வீரர்களுடன் ஒளிந்து கொண்டு டிராய் கோட்டைக்குள் சென்று இரவு நேரத்தில் வெளியே வந்து சண்டை போட்டு, கோட்டை கதவை திறந்து ஸ்பார்ட்டா படையை உள்ளே வர வரவழைத்து உதவுகிறான். அந்த ராஜதந்திரத்தால் ஸ்பார்ட்டா அரசு ஜெயிக்கிறது. அதனால் பல ஆண்டுகள் சொந்த நாடு திரும்ப முடியாமல் அங்கேயே தவிக்கிறான் ஒடிசியஸ். ஒரு கட்டத்தில் தனது வீரர்களுடன் கப்பலில் நாடு திரும்ப ஆரம்பிக்கிறான். அந்த பல ஆண்டுகால பயணத்தில் அப்போது பல தடைகள், பல உயிர் இழப்புகள் ஒடிசியஸ் பல ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்புனாரா? என்பது ஒரு கதை. தவிர அவரது இத்தாக்கா நாட்டில் குழப்பங்கள், ஒடிசியஸ் இறந்துவிட்டார், இனி நாடு திரும்பமாட்டார், என்னை மறுமணம் செய் என ஒடிஸியஸ் மனைவிக்கு பிரஷர் கொடுக்கிறார் வில்லன். அந்த கும்பலின் அட்டகாசத்தால் அவதிப்படும் ஒடிசியஸ் மகன் தனது தந்தையை தேடி கடல் பயணம் செய்கிறார். அவன் தந்தையை கண்டுபிடித்தாரா? ஒடிசியஸ் மனைவி மறுமணம் செய்தாரா? நாடு திரும்பினாரா ஒடிசியஸ் என்ற ரீதியில் கிரேக்க வரலாறு, போர், அரச சண்டை, கடல் பயணம், புயல், துரோகம், வீரம், அப்பா மகன் பாசம், மனைவி அன்பு, ஒரு வீரனின் கதை என பல கோணங்களில் தி ஒடிசி படம் நகர்கிறது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படம் என்பதாலும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்குபின் ஹோமர் எழுதிய ஒடிசி காவியம் சினிமா ஆகி இருப்பதாலும் படத்துக்கு உலகம் முழுக்க வரவேற்பு.

மேட் டாமன் ஒடிசியஸ் ஆக வருகிறார். அவர் மனைவியாக அன்னா ஹாத்வே வருகிறார். மகனாக டாம் ஹாலண்டும், வில்லன் ஆக ராபர்ட் பார்ட்டின்சன் நடித்து இருக்கிறார்கள்.

படத்தில் கண் தெரியாத பெரியவர், ஸ்பார்ட்டா அரசன் அவர் கறுப்பின மனைவி, கடல் பயணத்தில் வருபவர்கள், வில்லன் டீம் என ஏகப்பட்ட நடிகர்கள். கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை புதுப்புது கேரக்டர் அறிமுகம் ஆகிக் கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் புதுசு.

பிரம்மாண்ட ஹாலிவுட் படம் என்பதாலும், வரலாற்று கதை என்பதாலும், கிறிஸ்டோபர் நோலன் படம் என்பதாலும் பல காட்சிகள் மிரள வைக்கின்றன. ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் நான் லீனியர் முறையில் படத்தை நகர்த்தி இருக்கிறார். குறிப்பாக குதிரை சிலைக்குள் ஒழிந்து கொண்டு டிராய் நகரில் நுழைந்து, கோட்டை கதவை திறந்து அந்த நகரத்தை ஸ்பார்ட்டா படைகள் துவம்சம் செய்யும் காட்சிகள், அப்போது நடக்கும் சண்டை, அழுகுரல் , அத்துமீறல் மனதை விட்டு அகல பல நாட்கள், அதை ஒடிசியஸ் பார்வையில் கொஞ்சம் மனித நேயத்துடன் இயக்குனர் விவரிக்கும் இடங்கள், போரின் கொடுமை சொல்லும் வசனங்கள் மனதை உலுக்குகிறது.

அடுத்து கடற்பயணம், அதில் வரும் இடையூறுகள், ராட்சத கடல் மகன், அவனின் அச்சுறுத்தல், அவனை சமாளித்து வெற்றி பெறும் சீன்கள், உயரமான மனிதர்களுடன் சண்டை, மனிதர்களை பன்றிகளாக மாற்றும் சூனியக்காரி சீன்கள், வித்தியாசமான பாடல் கேட்கும் இடங்கள், இறந்த ஆன்மாகளுடன் பேசும் உணர்வுபூர்வமான காட்சி, ஒரு கோயிலில் நடக்கும் விஷயங்கள், கிளைமாக்ஸ் சண்டை என படம் முழுக்க ஆக் ஷன், ஆச்சரியம், பேண்டசி நிறைந்து இருக்கிறது. இதெல்லாம் வழக்கமான படங்களில் இருந்து தி ஒடிசியை வேறுபடுத்தி காண்பித்து அனைத்து தரப்பையும் ரசிக்க வைக்கிறது.

தவிர, உணர்ச்சிபூர்வமான பல சீன்களும், உளவியல், மன ஓட்ட சீன்களின் பிரமாதம். ஹீரோவின் நான் யார் என்ற கேள்வி, கனவு, பிரமை, ஆவி உலகம், கடவுள் பக்தி, கடமை, நேர்மை ஆகியவை படத்தை மனதோட ஒன்றி ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ஹீரோ மனைவியின் உளவியல் போராட்டம், மறுமணம், மகன் குறித்த கவலை அவர் வைக்கும் போட்டி ஆகியவை புதுமை.

அப்பா - மகன் பாசம், அம்மா - மகன் பாசம், சகோதர பிரச்னை, அரச விசுவாசம், ஒரு தலைவனின் பொறுப்புணர்வு என பல காட்சிகளில் நம்மை எமோசனலாகவும் பீல் பண்ண வைக்கிறார் இயக்குனர். காதல், கவர்ச்சி இல்லை. தமிழ் டப்பிங் செட்டாகி இருக்கிறது.

ஓடிசியஸ் என்ற குறுநில மன்னனின் தனிப்பட்ட வாழ்க்கை, போர், கடமை உணர்வு, ஏமாற்றம், பழி வாங்கல் தான் படக்கரு. அந்த ஒடிசியஸ் மன்னனாக அதிகம் அலட்டாமல் நடிப்பில் அசத்தி இருக்கிறார் மேட் டாமன். ஆக் சன் காட்சிகளில், கிளைமாக்ஸ் சண்டை விருந்து படைக்கிறார். அவரை கொஞ்சம் வயதானவராக காண்பிப்பது உறுத்தல். கெத்தான அரசனாக காண்பித்து இருக்கலாம். உலகப்புகழ் பெற்ற கிரேக்க காவியத்தை கமர்ஷியலாக சினிமாவில் பதிவு செய்து இருக்கிறார். சினிமா லவ்வர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

படத்தில் சில இந்திய கனக்ட் இருக்கிறது. ராமாயணத்தில் ராமர் வில்லை ஓடித்து சுயம்பரம் செய்வது போல, ஹீரோ வில் நான் ஏற்றி சண்டை செய்கிறார். கடவுள் பக்தி, கடவுளுக்கு பயப்படுவதை பல இடங்களில் சொல்கிறார் இயக்குனர்..காஸ்ட்யூம், லொகேஷன் வியக்க வைக்கிறது.

ஹாலிவுட் படம் என்பதால் வான் ஒளிப்பதிவு, லூட்டுங் இசை, சி.ஜி, ஸ்பெஷல் எபக்ட்ஸ், ஆக் ஷனில் தி ஒடிஸி பெர்பக்ட். படம் சுமார் 3 மணி நேரம் என்பதால் பொறுமையாக பார்க்க வேண்டும். சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது. சில காட்சி, வசனங்களை கதையுடன் கனெக்ட் பண்ண கஷ்டமாக இருக்கிறது. அரசுகள், அதன் பகை, வரலாறு, உள் குத்து விஷயங்களை புரிந்து கொள்வதிலும் சில பிரச்னைகள். கிரேக்க படம் என்பதால் சாமனியர்கள் கேரக்டர் பெயரை புரிந்து கொள்வதிலும் சிக்கல். கடைசி கட்டத்தில் தான் பல கேள்விகளுக்கு விடை தெரிவதால் அதுவரை பொறுமை அவசியம். நோலன் படத்தில் ஏகப்பட்ட குறியீடுகள் இருக்கும் அதை புரிந்தவர்கள் அறிவாளிகள்.

ஆனாலும் அந்த போர், கடல் பயணம், பேண்டசி, கிளைமாக்ஸ் சண்டை, எமோசனல் சீன் கள் மன நிறைவு தருகிறது. ஐமேக்ஸ் திரையில் பார்த்தால் இன்னும் அதிகமாக ரசிக்கலாம்.

தி ஒடிசி - வரலாற்று பிரியர்களுக்கு, நோலன் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !