PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM

'இந்த திடீர் திருப்பத்தை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை...' என கவலைப்படுகின்றனர், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும்.
இங்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இங்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தான், தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என, ஆந்திர அரசியல்வாதிகள் கருதினர்.
ஜெகன்மோகன் ரெட்டியும், சந்திரபாபு நாயுடுவும் கூட, 'நாம் இருவரில் ஒருவர் தான் ஆட்சியை பிடிக்க முடியும்...' என திடமாக நம்பினர். ஆனால், இவர்களுக்கு இடையே புயலாக உள்ளே நுழைந்துள்ளார், ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா.
இவர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி. ஜெகனுடன் ஏற்பட்ட மோதலால், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள இவர், ஆந்திர மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி கிடைத்ததில் இருந்து, தன் சகோதரர் தலைமையிலான அரசுக்கு எதிராக தினமும் ஒரு போராட்டம், பேரணி என ஆந்திர அரசியலை கிடுகிடுக்க வைத்து வருகிறார்.
ஷர்மிளாவின் இந்த அதிரடி அரசியலை சமாளிக்க முடியாமல் ஜெகன்மோகனும், சந்திரபாபுவும்திகிலடித்து போயுள்ளனர்.
'தேர்தல் நேரத்தில் இன்னும் என்னென்ன அதிரடியை அரங்கேற்ற ஷர்மிளா திட்டமிட்டுள்ளாரோ தெரியவில்லை...' என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர், ஆந்திர மக்கள்.