PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

'என்னை பற்றி எது வேண்டுமானாலும் பேசுங்கள்; என் குடும்பத்தை பற்றி எப்படி பேசலாம்...?' என கொதிக்கிறார், சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், சமீபத்தில் ஆளுங்கட்சி மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்.
'அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பல கோடி ரூபாய், காணாமல் போய் விட்டது. அந்த பணம் எங்கே போனது என்பது குறித்து, ஆளுங்கட்சியினர் பதில் அளிக்க வேண்டும்...' என, அகிலேஷ் கேட்டிருந்தார்.
இதையடுத்து, அகிலேஷ் குடும்பத்தினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 'அகிலேஷின் வீட்டிலிருந்து அவர் மகள், 7 கோடி ரூபாயை திருடிச் சென்று விட்டார். தற்போது, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த தன் ஆண் நண்பருடன், பிரிட்டனில் அவர் வசித்து வருகிறார்...' என, பலரும் விமர்சித்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அகிலேஷ், 'எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், என் மகள் மீது அவதுாறு பரப்புகின்றனர். அரசியல்வாதி என்பதற்காக இப்படிப்பட்ட பழிகளை தாங்க வேண்டியிருக்கிறது. அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்காமல், குடும்பத்தினர் மீது அவதுாறு பரப்புவது எந்த வகையில் நியாயம்...?' என, கண்ணீர் வடிக்கிறார்.
